மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு காலணி அணிவித்த கோவை ஆட்சியர் ; கண்ணீருடன் நன்றி தெரிவித்த குடும்பம்!
கோவையில் மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் காலணி அணிவித்ததற்கு, கண்ணீர் மல்க அச்சிறுவனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். மாற்றுத் திறனாளியான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் மகள் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது இளைய மகன் அழகு மணிக்கு 3 வயதாகிறது. பெட்டி கடை நடத்தி வந்த வேல்முருகன் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்துள்ளார். இந்நிலையில் தனக்கு உதவிடுமாறு கடந்த ஜூலை 5ம் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தார். இதனையடுத்து அவரது மனு பரிசீலனை செய்யபட்டு, மாற்று திறனாளி சிறுவன் அழகுமணி மற்றும் சிறுவனது தந்தைக்கு காலணிகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவிக்கு மிதி வண்டி, புத்தக பை உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார். அப்போது மாற்றுத் திறனாளி சிறுவன் அழகுமணி கால்களில் மாவட்ட ஆட்சியர் சமீரன், காலணிகளை பொருத்தினார்.
இதனைக் கண்ட வேல்முருகனின் குடும்பத்தினர் கண் கலங்கியபடி உணர்ச்சி தழும்ப நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு குடிசை மாற்று வாதியத்தில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என வேல்முருகன் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதி அளித்தார்.
எஸ்.பி. வேலுமணி மீது காவல் நிலையத்தில் புகார்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மனு அளித்த போது, மாவட்ட ஆட்சியர் சமீரன் தனது இருக்கையில் அமர்ந்தபடி மனுவினை வாங்க முயன்றார். இதற்கு அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது "எம்.எல்.ஏ. வந்தா, எழுந்திருச்சு வாங்க மாட்டீங்களா?" என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். " எதற்கு எழுந்து நிற்க வேண்டும்?" என ஆட்சியர் சமீரன் கேட்க, "இது ரொம்ப தவறு சார். நான் 25 வருசத்துக்கு மேல பொது வாழ்க்கையில் உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மனு கொடுக்கும் போது இப்படி அமர்ந்தவாறு வாங்குவீர்களா? என்ன பழக்கம் இது? இது என்ன புது பழக்கமாக உள்ளது?" என முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கடிந்து கொண்டார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சூலூர் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.