அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கிராம மக்கள் எடுத்த அசத்தல் கூட்டுமுயற்சி..! குவியும் பாராட்டுக்கள்..
பொதுத்தேர்வுகளுக்கு முன்னர் கோவை கிராம மக்கள் முன்னெடுத்த ஒரு நன்முயற்சியை இங்கே பார்க்கப்போகிறோம்.
தமிழ்நாட்டில் இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. பொதுத்தேர்வுகளுக்கு முன்னர் கோவை கிராம மக்கள் முன்னெடுத்த ஒரு நன்முயற்சியை இங்கே பார்க்கப்போகிறோம்.
கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி வாகராயம்பாளையம். இப்பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் நெருங்கும்போது மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த சமயங்களில் காலை முதல் மாலை வரை பள்ளியில் இடைவிடாது பாடங்களைப் படிக்கும் மாணவ, மாணவியர், மாலையில் தொடர்ந்து நடக்கும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதால், பசியால் சோர்வடைய வாய்ப்புள்ளது. இதனால் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. இதனைப் போக்கி மாணவர்கள் உற்சாகத்துடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு, முன்னாள் மாணவர்கள் அமைப்பு, பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும், இந்த திட்டத்திற்கு மாணவ மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளியில் உணவு தயாரிக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் துவங்கும் முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது. மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிற்றுண்டி திட்டத்தால், மாலை நேரத்தில் சோர்வு நீங்கி படிப்பில் கவனம் செலுத்த முடிவதாக மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய அப்பள்ளி மாணவிகள், “இப்பள்ளியில் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் தான் அதிகளவில் படித்து வருகின்றனர். மதியம் உணவு சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் மீண்டும் பசியும், சோர்வும் ஏற்படும். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றால் சாப்பிட்டால் தான் சோர்வு நீங்கும். பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் பசி, சோர்வால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாது. அதனைப் போக்கும் வகையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வகுப்பில் கவனம் செலுத்தி படிக்க முடிகிறது. இதனைச் செயல்படுத்தி வரும் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார் கூறுகையில், ”பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தினமும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம். தற்போது 330 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு மாலை நேர சிற்றுண்டியாக தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவி வருவதால் இந்த திட்டம் தற்போது வரை சுணக்கம் இன்றி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவ மாணவியர் வருகையும், தேர்ச்சி சதவீதமும் உயர்ந்துள்ளது. அதேபோல பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” என அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கிராம மக்களின் இந்த கூட்டு முயற்சி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.