தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - கோவையில் பரபரப்பு
பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று வெடிகுண்டு உள்ளதா என சோதனை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி அலுவலக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் மாங்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆவடி மாநகர காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சோதனை செய்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் அப்பள்ளியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், வடவள்ளி காவல் துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று வெடிகுண்டு உள்ளதா என சோதனை செய்தனர்.
இதனிடையே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், பதற்றமடைந்த குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி முன்பாக திரண்டனர். மேலும் பதற்றத்துடன் குழந்தைகளை வீடுகளுக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். மேலும் பள்ளி வாகனங்களில் வரும் குழந்தைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் காஞ்சிபுரம் மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. கடந்த மாதம் ஏராளமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தையடுத்து தற்போது மீண்டும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.