Coimbatore Orange Alert: கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை ; மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது.
![Coimbatore Orange Alert: கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை ; மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை Coimbatore Orange Alert Rain Prediction Kovai Weather Update TNN Coimbatore Orange Alert: கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை ; மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/16/94691312b331324b2df0980447e4ae1c1721114586339113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதிக்கு அதிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த வீடு
கோவை மாநகரப் பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக வால்பாறை, பொள்ளாச்சி, ஆழியார், ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஒடைய குளம் அறிவொளி நகரில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கனமழை காரணமாக நள்ளிரவு 2 மணி அளவில் பலத்த சத்தத்துடன் செந்தில்குமாரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது அனைவரும் சுதாரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஓடிள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் உயிர்தப்பினர். இதுகுறித்து அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இடிந்து விழுந்த வீட்டை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட நிர்வாகம் அறிவுரை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணத்தால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிகமழை பெய்ய வாய்ப்புள்ளதன் காரணத்தால் பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ பொழுதுபோக்கவோ அல்லது செல்பி எடுக்க செல்வதை தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரையோரங்கள் மற்றும் மழைநீர்தேங்கும் வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள்அனைவரும் மழைபெய்யும் நேரங்களில் வெளியில் இருக்கவேண்டாம். உயர்மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக கையாளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
பழுதடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் இருக்கவேண்டாம். பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்துவரும் பொதுமக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும். மழை மற்றும் வெள்ளநீர்தேங்கும் இடங்களில் உள்ள கால்நடைகளை வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுதல்கூடாது. வெள்ள அபாயம் அல்லது தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பின் நிவாரண முகாம்களில் தங்க விருப்பப்படும் பட்சத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)