Helmet Compulsory: கோவையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்
கோவை மாநகரில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது.
கோவை மாநகரில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் ஏற்படும் பெரும்பாலான சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரே பரிதாபமாக உயிரிழக்கின்றனர். கடந்த மே மாதத்தில் மட்டும் விபத்துகளில் சிக்கியவர்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எனவே கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், விபத்தினை தடுக்கும் விதமாக கோவை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து அடிக்கடி விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் 90 சதவீதத்திற்கும் மேல் தலைக்கவசம் அணிந்து ஓட்டுகின்றனர். அணியாதவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகரில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது தலைக்கவசம் அணியாதவர்கள் தான் அதிகம் உள்ளனர். அதேபோல விபத்துகளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம் என சில தினங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அது இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தலைக்காயத்தால் உயிரிழப்பை தடுக்க பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை கண்காணிக்கப்பட்டு விதிமுறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிபுணர்வு செயப்பட உள்ளது’’ என்றார். கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிக்கும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் இருவரும் தலைக்கவசம் அணிந்து வருபவர்களை காவல் துறையினர் பாராட்டினர். விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்