திமுக நிர்வாகியை தாக்கிய அதிமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு; முறையாக விசாரிக்காத எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட கவுன்சிலர் ரமேஷ் சந்தா தொகை செலுத்தவில்லை என கூறப்படுகின்றது. இது குறித்து திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கேள்வி எழுப்பினார்.
கோவை மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் சந்தா தொகை செலுத்தாததை கேள்வி கேட்ட திமுக நிர்வாகியை தாக்கிய அதிமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை முறையாக விசாரணை சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 90 வது வார்டு அதிமுக கவுன்சிலராக ரமேஷ் என்பவர் இருந்து வருகிறார். இவரும், இவரது நண்பர்களும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட கவுன்சிலர் ரமேஷ் சந்தா தொகை செலுத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் அதே கிளப்பில் விளையாடி வரும் திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சந்தா தொகை செலுத்தாமல் இருப்பது குறித்து கவுன்சிலர் ரமேஷிடம் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக கார்த்திகேயனுக்கும், கவுன்சிலர் ரமேஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கார்த்திகேயனை அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அபுதாகீர், ஜான்சன், சத்ரக் ஆகியோர் சேர்ந்து தாக்கினர். இதில் காயமடைந்த கார்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது குனியமுத்தூர் காவல் துறையினர் ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது குறித்து தகவல் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் தெரிந்தும் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தாமலும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் இருந்திருப்பது தெரிய வந்த நிலையில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்திரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்