Annamalai Arrest: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது .! காரணம் என்ன?
Annamalai Arrest: கோவையில் அனுமதியின்றி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசை கண்டித்து, தடையை மீறி கோவை கருப்பு தின பேரணியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்ஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததற்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்ற நிலையில் அண்ணாமலை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
போராட்டம் ஏன்?
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக கருதப்பட்ட பாட்ஷா என்பவர், உடல்நலக்குறைவால் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலமானது கடந்த 17ஆம் தேதி நடந்த நிலையில், காவல்துறையினர் அனுமதி வழங்கியதற்கு, தமிழக பாஜக மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவையில் போக்குவரத்தை நிறுத்தி, இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர் என்றும்; சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஊர்வலத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிச.20 கருப்பு தினமாக அறிவித்து பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தடையை மீறி பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்
இதற்கு , பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “ குற்றவாளிகளுக்கு ஊர்வலம் நடத்த அனுமதி; அதை தட்டிக் கேட்டால் கைது. தமிழக அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். கோவையில் அமைதியான முறையில், கண்டனத்தை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்ற நிர்வாகிகளையும் கலந்து கொண்ட சகோதர இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் கைது செய்திருப்பது தமிழக அரசின் அராஜகப் போக்கை காண்பிக்கிறது. குற்றவாளிகளுடன் கைகுலுக்குவது நேர்மையாளர்களை கைது செய்வது இதுதான் தமிழக அரசின் நியாயமற்ற நீதியற்ற நடைமுறை. வன்முறையாளர்களுக்கு ஆதரவு; நன்முறையாளர்களுக்கு அனுமதி மறுப்பு என்ற தமிழக அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு திருந்த வேண்டும், இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.