கரூர் அருகே குட்கா, பான்மசாலாவை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைப்பு...!
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகாரினை, உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த பான்மசாலா குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக, கரூர் மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடவூர் அருகே காணியாளம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி, மாணிக்கம், செல்வகுமார், தலைமைக் காவலர்கள் காணியாளம்பட்டி, எஸ்.பி. சி.ஐ.டி தலைமைக் காவலர் செந்தில்குமார் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு அருகிலும் உள்ள ஸ்ரீ பாலாஜி ஸ்வீட்ஸ் & பேக்கரி என்ற கடையில் இருந்து சுமார் இரண்டாயிரம் மதிப்புள்ள இரண்டு கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரசால் பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டும், பத்திரிக்கை செய்திகள் வெளியிடப்பட்டும், அதனைப் பொருட்படுத்தாமல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கல்லூரி மாணவர்களை குறிவைத்து, அவர்களுக்கு விற்பனை செய்திடும் நோக்கத்துடன் செயல்பட்ட ஸ்ரீ பாலாஜி ஸ்வீட்ஸ் & பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்பு துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும், தாந்தோணி வட்டாரம், வெள்ளியனை கடைவீதி பகுதியில் சுமார் 10 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், முத்து டீ ஸ்டால் என்ற கடையில் சுமார் 1500 மதிப்புள்ள 1.5 கிலோ அளவிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஅக்கடைக்கு உணவுப் பாதுகாப்பு துறையினரால் சீல் வைக்கப்பட்டது. இதுபோன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை முற்றிலும் நிறுத்திட வேண்டும் எனவும், அதனை மீறும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வணிகர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.
மேலும், உணவுப் பொருள் தரம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக, பொது மக்கள் தங்களது புகாரினை, உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போதே குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை சார்ந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் சட்டவிரோதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டே வருகிறது.