கோவையில் பிடிபட்ட வெள்ளை நிற நாகம் ; படமெடுத்த பாம்பை பார்த்து மக்கள் ஆச்சரியம்
கடந்த 2 ம் தேதியன்று காலையில் ஒரு வெள்ளை நிற நாகப்பாம்பு இருப்பதைப் பார்த்த அவர், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார்.
கோவை குறிச்சி பகுதியில் வெள்ளை நிற நாகப்பாம்பை மீட்ட வன ஆர்வலர்கள் அதை அடர் வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர்.
கோவை போத்தனூர் சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது வீட்டில் கடந்த 2 ம் தேதியன்று காலையில் ஒரு வெள்ளை நிற நாகப்பாம்பு இருப்பதைப் பார்த்து அச்சம் அடைந்துள்ளார். அந்த பாம்பை அடித்து கொல்ல மனம் இல்லாத அவர், வீட்டில் வெள்ளை நிற நாகப்பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதனை பிடித்து செல்லுமாறும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் அவ்வமைப்பை சேர்ந்த மோகன் என்பவர், ஆனந்த் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சுமார் 5 அடி நீளமுள்ள வெள்ளை நிற நாகம் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த வெள்ளை நிற நாகப்பாம்பை காயமின்றி பத்திரமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை கோவை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த வெள்ளை நிற நாகத்தை நேற்று அடர் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட அந்த பாம்பு வனப்பகுதிக்குள் சென்றது. அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், இது போன்ற மரபணு மற்றும் நிறமி குறைபாடு போன்ற பிரச்சனைகளால் பாம்புகள் வெள்ளைநிறத்தில் இருக்கும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். பாம்புகள் அச்சத்தில் தான் மனிதர்களை தாக்குவதாகவும், இதுபோல பாம்புகள் வீடுகளுக்கு வந்தால் அவற்றை அடித்துக் கொள்ளாமல் பாம்பு பிடிப்பவர்களிடம் கூறினால், அவற்றை மீட்டு பத்திரமாக வனப்பகுதிக்குள் விடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 2019 ம் ஆண்டு கோவை மதுக்கரை பகுதியிலும், கடந்த 2022 ம் ஆண்டு சுந்தராபுரம் பகுதியிலும் இதே போன்ற வெள்ளை நிற பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்