பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பஞ்சமி நிலத்தில் பட்டா வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பண மோசடி. பாலியல் தொந்தரவு அளிப்பதாக விசிக முன்னாள் நிர்வாகி மீது குடியிருக்கும் பெண்கள் புகார்.

கோவை மாவட்டம் காரமடை அருகே பஞ்சமி நிலத்தில் வசித்து வருபவர்களிடம் பட்டா வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கில் பணத்தை ஏமாற்றியதோடு, அங்கு குடியிருக்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு அளிப்பதாக விசிக முன்னாள் நிர்வாகி மீது அருந்ததியின பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
சிக்காரம் பாளையம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கருக்கு மேல் உள்ள பஞ்சமி நிலத்தில் அருந்ததியினர் சமுதாயத்தை சார்ந்த 140 குடும்பங்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. திருமா நகர் என பெயரிட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பொதுமக்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் என்பவர் தன்னுடைய பாதுகாப்பில் இந்த இடம் உள்ளதாக கூறிக்கொண்டு இங்கு குடியேறும் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பட்டா, தண்ணீர், பாதுகாப்பு என சொல்லி பணம் பறிப்பு
இதனிடையே, இடத்திற்கு பட்டா வாங்கி தருவதாகவும், வீட்டுக்கு வீடு தண்ணீர் சப்ளை என பல காரணங்களை கூறி ஒவ்வொரு குடியிருப்பாளர்களிடம் தலா 2 லட்ச ரூபாய் சித்தார்த்தன் பெற்று கொண்டுள்ளார். மேலும் மாதாமாதம் 500 ரூபாய் சந்தா தொகையும் கடந்த 6 ஆண்டுகளாக வசூல் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பணம் கொடுக்காத பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக கூறும் பாதிக்கப்பட்ட பெண்கள், விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதனை தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















