திடீரென ஒலித்த எச்சரிக்கை மணி: அவசரமாக தரையிறங்கிய விமானம் - கோவை விமான நிலையத்தில் பரபரப்பு
விமானத்தில் தீப்பிடித்ததற்கான அலாரம் ஒலித்ததால் கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க அனுமதி கேட்டனர்.
![திடீரென ஒலித்த எச்சரிக்கை மணி: அவசரமாக தரையிறங்கிய விமானம் - கோவை விமான நிலையத்தில் பரபரப்பு A flight from Bengaluru to Mali made an emergency landing at the Coimbatore airport திடீரென ஒலித்த எச்சரிக்கை மணி: அவசரமாக தரையிறங்கிய விமானம் - கோவை விமான நிலையத்தில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/16/a31c6c3650eb0d67d8bc041353ee6115_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெங்களூருவில் இருந்து மாலத்தீவின் தலைநகர் மாலேக்கு சென்ற விமானத்தில் தீ பிடித்ததற்கான அறிகுறிகள் ஏற்பட்டதால், உடனடியாக கோவை விமானத்தில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இன்று மதியம் 12:00 மணி அளவில் 92 பயணிகளுடன் கோ ஃபர்ஸ்ட் விமானம் மாலத்தீவின் தலைநகரான மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் தீ பிடித்ததற்கான புகை ஒலி எச்சரிக்கை மணி திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கொச்சின் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்திற்கு தொடர்பு கொண்ட விமானி, இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விமானம் தரை இறங்குவதை அடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணியினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 12. 57 மணியளவில் விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் தீப்பிடிப்பதற்கான எந்த ஒரு அறிகுறிகள் இல்லாததால் விமான பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து கோயம்புத்தூர் விமான நிலையத்தின் இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், ”விமானத்தில் தீப்பிடித்ததுக்கான அலாரம் ஒலித்ததால் கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த விமானத்தில் தீ பிடித்ததற்கான அறிகுறிகள் இல்லாததால் விமானம் கோவையில் இருந்து புறப்பட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட சில நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டு செல்லும்” என அவர் தெரிவித்தார். இதனிடையே, இந்தச் சம்பவத்தால் பயணிகள் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர். நீண்ட நேரம் விமானத்தில் இருந்த அவர்களுக்கு சிற்றுண்டி மட்டும் கொடுத்துள்ளதாகவும், வேற எந்த வசதியும் செய்து தரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தினால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சித்ரா பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வந்துச் செல்கின்றனர். இதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)