Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro Train Service: சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக கோயம்பேடு இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Chennai Metro Train Service: சென்னை மெட்ரோ ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டு இருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக கோயம்பேடு இடையேயான நேரடி ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செண்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக நேரடியாக கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மெட்ரோ பயணத்திற்கான மாற்று வழிகள்
அதேநேரம், “கிரீன் லைன் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்டர்சேஞ்ச் செய்து, ப்ளூ லைன் விமான நிலைய சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், க்ரீன் லைனில் இருந்து ப்ளூ லைனுக்கு பயணிக்கும் பயணிகளும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்டர்சேஞ்ச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்டர்-காரிடர் சேவையைத் தவிர, கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் ரயில்கள் இரண்டும் வார நாட்களின் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சிக்கலைத் தீர்க்க எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன, மேலும் கூடுதல் புதுப்பிப்புகள் விரைவில் பகிரப்படும். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், உங்கள் பொறுமைக்கு நன்றி” என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டுமா?
சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையில் ஒரு வழித்தடத்திலும், சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டரை கடந்து உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் வழியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறால் ரயில் நின்றது. மெட்ரோ ரயில் ஓட்டுனர் அதை சரி செய்ய முயற்சித்தார். ஆனால், அவரால் சரி செய்ய இயலவில்லை.
மெட்ரோ திடீரென நடுவழியில் நீண்ட நேரம் நின்றதால் பயணிகள் அச்சத்திற்கு ஆளானார்கள். மெட்ரோ ரயில் உள்ளே விளக்குகளும் அணைந்ததால் பயணிகள் மிகுந்த பீதிக்கு ஆளாகினர். இதையடுத்து பயணிகள் தங்களது கைகளில் இருந்த செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தி, சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே பழுதாகி நின்ற மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கி சுரங்கப்பாதை வழியாக வெளியே நடந்து வந்தனர்.





















