நீலகிரியில் சிறுத்தை தாக்கி அரசு அதிகாரிகள் உள்பட 7 பேர் காயம்
வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை புரூக்லேண்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வீட்டில் வளர்க்கப்படும் நாயை பிடிக்க சென்ற சிறுத்தை, திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பங்களாவில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 7 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தைகள் நடமாட்டம்:
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மலை மாவட்டமாக இருந்து வருகிறது. பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தின் வனப்பகுதிகள், காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாகச் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை புரூக்லேண்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வீட்டில் வளர்க்கப்படும் நாயை பிடிக்க சென்ற சிறுத்தை, திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்தது. இது குறித்து அந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் அடிப்படையில் வந்த தீயணைப்பு துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர்.
அதிகாரிகள், நிருபர் மீது தாக்குதல்:
அப்போது கண்ணன், முரளீதரன், கிருஷ்ணகுட்டி ஆகியோரை சிறுத்தை தாக்கியது மேலும் வீட்டின் உரிமையாளர் விமலா, வருவாய்துறை அலுவலர் சுரேஷ், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் திருநாவுக்கரசு ஆகியோரையும் சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அனைவருக்கும் குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுத்தையை பிடிக்கும் பணிகளில் முழு கவச உடை அணிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்கிய சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் வீட்டிற்குள் உள்ள சிறுத்தையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த சிறுத்தைக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குடியிருப்பு அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், தற்போது குடியிருப்பில் உள்ள அனைத்து கதவுகளையும் திறந்து விடப்பட்டு வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.