கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது
கௌதம் சியாமல் கட்டுவா மற்றும் அவருடன் வந்த தன்மாய் ஜனா ஆகியோரை வழி விடாமல் நடந்து சென்றதாக கூறி, சூரிய பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.
கோவை இடையர் வீதியில் வடமாநில தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை இடையர் வீதியில் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர் கௌதம் சியாமல் கட்டுவா என்பவர் தனது நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக நடத்து வந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரும், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரும் நடந்து வந்துள்ளனர். அப்போது கௌதம் சியாமல் கட்டுவா மற்றும் அவருடன் வந்த தன்மாய் ஜனா ஆகியோரை வழி விடாமல் நடந்து சென்றதாக கூறி, சூரிய பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.
மேலும் பானிபூரி கடையில் இருந்த மோனோ, ஷேக் சவான் என்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இரண்டு புலம் பெயர் தொழிலாளர்களையும் சூரியபிரகாஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கியுள்ளனர். இந்த தகவல் கிடைத்த மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் குறித்து கௌதம் சியாமல் கட்டுவா வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ் கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகிய 4 பேரையும் வெரைட்டிஹால் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 4 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புலம் பெயர் தொழிலாளர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோவையில் மேற்கு வங்க தொழிலாளர்களை தாக்கியதாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்