உலகநாயகன் செல்வாக்கு உள்ளூரில் எடுபடுமா?
திரைத்துறையில் அவருக்கு நிகர் அவரே என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் அந்த அடையாளம் அவருக்குத் தேர்தல் அரசியலில் கைகொடுக்குமா?
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் புதிதாகக் களமிறங்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். மொத்தம் 135 வேட்பாளர்கள் அந்தக் கட்சியிலிருந்து களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். சென்னையிலிருந்து போட்டியிடுவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியப்படுவதற்கில்லை.
2019 மக்களவைத் தேர்தலைச் சந்தித்த அந்தக் கட்சி கோவை பகுதியில்தான் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வானதி சீனிவாசன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் என இரண்டு தேசியக் கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்கிறார் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளராகத் தெற்கு தொகுதியில் களமிறக்கப்பட்ட மருத்துவர் மகேந்திரன் பாரதிய ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடத்தைப் பிடித்தார்.
கமல் இந்தத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லியிருந்தார்.
இது கமல்ஹாசனுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் இருந்தாலும் அந்தத் தொகுதியில் அமமுக சார்பில் இந்தமுறைத் தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் ஆர்.துரைசாமி, என்கிற சேலஞ்சர் துரை 2011-2016 சட்டமன்றத்துக்கு அதிமுக சார்பில் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.தொகுதி மக்களிடையே நன்கு பரிச்சயமான முகம்.அதனால் இவர் தொகுதி அடிப்படையில் கமல்ஹாசனுக்குச் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக வேட்பாளர் என்கிற அடிப்படையில் கமல்ஹாசனை வரி ஏய்க்காத வேட்பாளர் என அறிமுகப்படுத்தலாம்.தான் நேர்மையாக வரிகட்டுபவன் என்று அவரே பலமேடைகளில் சொல்லியிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட விவரங்களின்படி அவரது மொத்த மதிப்பு 127.4 கோடி.
கமல்ஹாசன் சொத்து விவரம்
தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட விவரங்களின்படி அவரது மொத்த மதிப்பு 127.4 கோடி.அசையும் சொத்துகள் மதிப்பு 45.9 கோடி மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 131.84 கோடி.ஆக, மொத்தச் சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய். கடனாக 49.5 கோடி ரூபாய் இருப்பதாகவும் தனது வேட்பு மனுவில் கமல் குறிப்பிட்டிருந்தார். தொடக்கத்தில் திராவிடப் பற்றாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கமல் இந்தத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லியிருந்தார். அவரது கட்சி இந்தமுறை ஐ.ஜே.கே மற்றும் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, விஜயகாந்த் என பல தமிழ்திரை நட்சத்திரங்களை அவர்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிபெறச் செய்தது. அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசன். ஜனாதிபதி விருது, தேசிய விருதுகள் மற்றும் ஃபிலிம்பேர் விருதுகள் எனப் பல திரைப்பட விருதுகளை வென்றவர். தான் நடித்த படங்களுக்காக அதிகம் ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியர்.நடனம், இயக்கம், எழுத்து, கதைவசனம் என சினிமாவில் பன்முகத்தன்மையுடன் வலம் வருபவர். தனது 4 வயதிலிருந்து திரைத்துறையில் இருக்கிறார். திரைத்துறையில் அவருக்கு நிகர் அவரே என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் அந்த அடையாளம் அவருக்குத் தேர்தல் அரசியலில் கைகொடுக்குமா? உலகநாயகனுக்கு உள்ளூரில் என்ன முடிவு காத்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.