முதல்வரிடம் ஜெயலலிதாவின் பக்குவம் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் கருத்து
முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தல் முதல் தே.மு.தி.க. இடம்பெற்று வந்தது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் அ.தி.மு.க.விற்கும், தே.மு.தி.க.விற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. பா.ம.க.விற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு அளிக்கவில்லை என்று தே.மு.தி.க.வினர் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து,அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க., தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இதில், தே.மு.தி.க.விற்கு 60 தொகுதிகளை அ.ம.மு.க. ஒதுக்கியது. தே.மு.தி.க.வினருக்கு பக்குவம் இல்லை என்று முதல்வர் கருத்து தெரிவித்திருந்தார்.
பக்குவம் இல்லை
இந்த நிலையில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி அளிப்பதாக அ.தி.மு.க. தலைமை கூறியது. ஆனால், 13 தொகுதிகள் எதுவென்று அடையாளம் காட்டவில்லை.
எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தினகரன்தான். வரும் 19-ந் தேதி விருத்தாச்சலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முதன்முறையாக விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.