NEP: காகிதத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கும்: பிரின்ஸ் கஜேந்திர பாபு எச்சரிக்கை
தேசியக் கல்விக் கொள்கைக்கு ஏற்றுக் கொண்டால் காகிதத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கும் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கைக்கு ஏற்றுக் கொண்டால் காகிதத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கும் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்துக் கல்வியாளரும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறுதான் மாநிலக் கல்விக் கொள்கை இருக்க வேண்டும் என்ற கருத்துப் பிரச்சாரத்தைப் பலரும் பல வடிவங்களில் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் தொடங்கி, மேனாள் துணைவேந்தர் உள்ளிட்ட பலரும் இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் பொதுக் கல்வி நிறுவனங்கள் இருக்கும் வரைதான் உயர்கல்வி வாய்ப்பு; அந்த கட்டமைப்பைத் தகர்த்து விட்டால் இட ஒதுக்கீடு காகிதத்தில் மட்டுமே இருக்கும்.
தேசியக் கல்விக் கொள்கை 2020, பொதுக் கல்வி கட்டமைப்பைச் சீரழித்து ஒட்டுமொத்தக் கல்வியையும் தனியார் வசம் ஒப்படைக்கும் சூழ்ச்சிகள் கொண்டது.
பல்வேறு மொழிவாரி தேசிய இனங்கள் உள்ள, பன்முகப் பண்பாட்டைக் கொண்ட இந்தியாவின் ஒற்றுமையும், மேம்பாடும் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கோட்பாட்டினால் மட்டுமே சாத்தியப்படும்.
சமஸ்கிருதப் பண்பாடு
எழுபத்தி ஐந்து ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டைச் சிதைத்து, சமஸ்கிருதப் பண்பாட்டைக் கொண்ட, பண்பாட்டு ஒற்றைத் தேசியத்தைக் கட்டமைப்பதே தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற ஆவணத்தின் நோக்கம். அதை வெறும் கல்விக் கொள்கைக்கான ஆவணமாகப் பார்த்துவிட முடியாது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வை, நோக்கம் மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளுக்கும் நேர் எதிரானது தேசியக் கல்விக் கொள்கை 2020.
தமிழ்நாடு அரசு தனது மறுமதிப்பீட்டு நிதிநிலை அறிக்கையில், ’கொரோனா பெருந்தொற்றின் விளைவாக இரண்டு ஆண்டுகள் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அத்தகையச் சூழலில் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும், அவர்களின் கல்வியியல் செயல்பாட்டை ஊக்கப்படுத்தத் தேவைப்படும் செயல்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஆறுமாத காலத் திட்டம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
மாநில அரசின் இந்தத் திட்டத்திற்கும், யார் வேண்டுமானாலும் தொண்டர்களாகப் பதிவு செய்துகொண்டு பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டிற்கு உதவலாம் என்ற தேசியக் கல்விக் கொள்கை 2020ல் கூறப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெளிவுபட விளக்கம் அளித்துள்ளது.
இல்லாததை இருப்பதுபோலும், இருப்பதை இல்லாதது போலும் மக்களை நம்ப வைத்திட, சொல்வன்மையுடைய ஒருவன் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும்; பேச்சுத் திறமை இல்லாத ஒருவன் சொல்லும் மெய்யும் பொய் போலவே தோன்றும் என்ற வெற்றிவேற்கை கூற்றுப்படி நாளும் ஓர் அறிக்கை தருவதன் மூலம் பொய்யை மெய்யாக்க சிலர் முயல்கின்றனர். இத்தகைய முயற்சியினால் மக்கள் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தி, தாங்கள் நினைத்ததைச் சாதித்துவிடத் துடிக்கின்றனர்.
குழந்தைப் பருவத்தில் வேலை வாய்ப்பிற்கான பயிற்சி என்பதும், 3, 5, 8 வகுப்புகளில் தேர்வு என்பதும் குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, நாமெல்லாம் இதற்கு மேல் படிக்க முடியாது என்று மாணவர்களைக் குழந்தைப் பருவத்திலேயே பதிய வைப்பது, அவர்களை முறையான, நேரடிப் பள்ளிக் கல்வியில் இருந்தும், உயர் கல்வியில் இருந்தும் வெளியேற்றுவது, அதையும் மீறி மாணவன் ஒருவர் உயர் கல்வியில் நுழைய முற்பட்டால் அவரைத் தடுத்து வெளியேற்ற பல அம்சங்கள் கல்விக் கொள்கையில் உள்ளன.
உதாரணத்துக்கு பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, முதல் ஆண்டில் அனைத்துத் தாளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இரண்டாம் ஆண்டு தொடர முடியும், மூன்றாண்டுகள் பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் ஹானர்ஸ் பட்டமாக மாற்றி, மூன்றாம் ஆண்டியில் 7.5 புள்ளிகள் இருந்தால் மட்டுமே நான்காம் ஆண்டு தொடர முடியும் என்றும் முட்டுக்கட்டை போட்டு, பட்ட மேற்படிப்பு, உயர் வேலை வாய்ப்புகளில் பெரும் பகுதி மாணவர்கள் பங்கேற்கத் தகுதியற்றவர்களாக்கி, காலம் காலமாக உயர் கல்வியிலும், உயர் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிர்காலத்தில் போட்டியே இல்லாத சூழலை ஏற்படுத்தும் சூழ்ச்சியே தேசியக் கல்விக் கொள்கை 2020.
மாநில அரசுக் கல்லூரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் முடிவு செய்ய வேண்டும்.
பள்ளிக் கல்வி தலைப்பில் "பள்ளி வளாகம்" குறித்து பேசுவது போலவே, பல கல்லூரிகளை இணைத்து (cluster of colleges) "கல்லூரி வளாகம்" உருவாக்கச் சொல்கிறது தேசியக் கல்விக் கொள்கை 2020. அல்லது கல்லூரி ஒவ்வொன்றும் பல்துறை உயர்கல்வி நிறுவனமாகச் செயல்பட வேண்டும் என்று சொல்கிறது. அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையற்ற நிர்பந்தங்களை உருவாக்கி, அவற்றை சுயநிதி நிறுவனங்களாக மாற்றுவதும், தனியாரிடம் ஒப்படைப்பதும் என்பதே இதன் நோக்கம்.
தமிழ்நாடு அரசு இத்தகைய பாதகமான விளைவுகளைக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கை 2020யை நிராகரித்து, தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கி, அனைவரும் பள்ளிக் கல்வி முடித்து உயர் கல்வி பயில, தமிழ் நாடு என்றுமே "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற பெரும் புகழுடன் திகழ்வதை உறுதிப்படுத்துவோம் என்பதே தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அத்தகைய முயற்சிகளுக்குத் தமிழ் நாடு மக்கள் துணையாக நிற்கிறார்கள்.
மாநில மக்களின் தேவை, விருப்பத்தை உணர்ந்து இம்மாநிலத்திற்கு ஏற்ற கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு உருவாக்கும். அதையே மக்களும் விரும்புகின்றனர். மக்கள் நலனுக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை 2020யை தமிழ் நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இதுகுறித்து யார், எங்கு அழைத்தாலும் விவாதிக்க, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்றும் தயாராக உள்ளது''.
இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.