மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி: முழுத்தொகையும் இனி ரொக்கமாகவே வழங்கப்படும் - தமிழக அரசு
பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பாதி ரொக்கம், பாதி சேமிப்புப் பத்திரம் என்ற நடைமுறை ரத்து செய்யப்பட்டு, ரூ.50,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பாதி ரொக்கம், பாதி சேமிப்புப் பத்திரம் என்ற நடைமுறை ரத்து செய்யப்பட்டு, ரூ.50,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
''மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திருமண நிதியுதவி வழங்கும் திட்டங்களின் கீழ் பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 உயர்த்தி வழங்கவும் இதனுடன் மணப்பெண்ணிற்குத் திருமாங்கல்யம் செய்ய நான்கு கிராம் தங்கம் இலவசமாக வழங்க ஆணையிடப்பட்டது.
அத்துடன் வழங்கப்படவிருக்கும் திருமண உதவித்தொகை ரூ.50,000/-ல் ரூ.25,000/- ரொக்கப் பணமாகவும், மீதமுள்ள ரூ.25,000/-னை தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்கவும் அரசால் ஆணையிடப்பட்டது. மேலும், இச்சலுகை ஒரு குடும்பத்தில் ஒரு பெண் பயனாளிக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையினைப் பின்பற்றுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அறிவுறுத்தப்பட்டார்.
இதற்கிடையே 2022- 2023ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, தமிழக முதலமைச்சர் 21,04.2022 அன்று சட்டமன்றப் பேரவையில், “மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியில் பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையையும்
ரொக்கமாக வழங்கப்படும்’’ என்றுஅறிவிப்பினை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் இத்திட்டத்தினை செயல்படுத்திட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களை திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் மற்றும் நிதி உதவித்தொகையினை தேசிய சேமிப்பு பத்திரமாக அல்லாமல் முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்கிட உரிய அரசாணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார்.
மாற்றுத்திறனாளிள் நல இயக்குநரின் கருத்துருவினை நன்கு பரிசீலனை செய்த அரசு அதனை ஏற்று, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டங்களின் கீழ் பட்டயபடிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000/. மற்றும் ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25,000/- என வழங்கப்பட்டு வந்த திருமண உதவித் தொகையில் 50% ரொக்கமாகவும் மீதமுள்ள 50% தொகையினை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்த நடைமுறைக்கு பதிலாக பயனாளிகளுக்கு முழு தொகையையும் ரொக்கமாக வழங்கிட அரசு ஆணையிடுகிறது''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்