இனிமேல் மெட்ரோ ரயிலில் இந்த இருக்கைகளில் பார்த்து அமருங்கள் !! எச்சரிக்கை கொடுத்த நீதிமன்றம்
மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் , மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற் கொள்ள வேண்டும்

சென்னை சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.ஆர் மேனன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில் ;
ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் ஒரு முழு பெட்டியும் பெண்களுக்கு ஒதுக்கப்படுவது போல, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே என போதுமான எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மற்றவர்கள் அமர்ந்து செல்வதாகவும் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா ,நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் ஏ. எட்வின் பிரபாகர் ஆஜராகி ;
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், பயணிகள் இல்லாத போது மட்டுமே மற்றவர்கள் அமர முடியும் என்றும், இல்லையெனில், அந்த இருக்கைகள் மூத்த குடிமக்கள்,மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மெட்ரோ ரயில்களின் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள இன்டர்காம் மூலம் பயணிகள் எப்போதும் புகார்களை அளிக்கலாம் என்றும், அவர்களை அமர வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டு நீதிபதிகள், மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற் கொள்ள வேண்டும். இது குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.




















