Chennai Metro Rail: மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு; 15 - 19-ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் - நோட் பண்ணிக்கோங்க
சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மேல், 2-ம் கட்ட வழித்தட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், பச்சை வழித்தடத்தில் வரும் 15 முதல் 19-ம் தேதிகள் வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகதியாக, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மேல் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக, பச்சை வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள், வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
நீல வழித்தடத்தில், அதாவது விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பச்சை வழித்தடத்தில் 15 முதல் 19-ம் தேதிகளில் மட்டும் காலை 5 மணி முதல் 6 மணி வரை. கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை இருக்காது.
பரங்கி மலை மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை ரயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
விமான நிலைய மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை ரயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் முதல் கோயம்பேடு மெட்ரோ நிலையம் வரை ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இதேபோல், கோயம்பேடு முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை கீழ்கண்ட தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், பயணிகளின் வசதிக்காக, கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெட்ரோ நிலையம் இடையே, காலை 5 மணி முதல் 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மெட்ரொ ரயில் சேவை வழக்கம் போல், வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக மாற்றங்கள், 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடைபெறுவதற்கு அவசியமானவை என்றும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துவதாகவும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





















