(Source: ECI/ABP News/ABP Majha)
Amutha IAS: சம்பவம் செய்வதில் சீனியர்..! அமுதா ஐஏஎஸ் செய்த சம்பவங்கள் இத்தனையா..?
Amudha IASbiography : காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு துணை ஆட்சியராக அமுதா ஐஏஎஸ் பொறுப்பில் இருந்தபோது செய்து பணிகள் குறித்த கட்டுரை
அதிரடிக்கு பெயர் அமுதா ( Amutha IAS )
மதுரையைச் சேர்ந்த 1994 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அமுதா களத்தில் இறங்கி வேலை செய்வதற்காகவும் , துணிச்சலான முடிவுகளை எடுத்ததற்காகவும் பெயர் பெற்றவர். 1990 களின் பிற்பகுதியில் சந்தனக்கடத்தல், வீரப்பனின் ராஜ்ஜியம் இருந்தபோது, சத்தியமங்கலத்தின் அடர்ந்த காடுகளுக்குள் சென்று அங்குள்ள உள்ளூர் மக்களை சந்தித்து பேசி, அவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளார் . இதேபோல் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது, செங்கல்பட்டு துணை ஆட்சியராக அமுதா ஐஏஎஸ் சுமார் 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
மணல் கொள்ளைத் தடுப்பு
செங்கல்பட்டு துணை ஆட்சியராக இருந்த பொழுது, மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு , தாம்பரம் உள்ளிட்டப் பகுதிகளில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்கி வந்தன. சட்டவிரோதமாக இயங்கிவரும் கல் குவாரிகளுக்கு, காவல்துறையினர் இல்லாமலே துணிச்சலாக சென்று ஆய்வு மேற்கொண்டு அவற்றிற்கு சீல் வைத்தார். அதேபோல் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, துணிச்சலுடன் எதிர்த்து நடவடிக்கை எடுத்தார். செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்தினார்.
ஒருமுறை, தாம்பரம் திரிசூலம் பகுதியில், பிரபல ரவுடி ஒருவர் நடத்திய கல்குவாரிக்கு சீல் வைத்தது தொடர்பாக, தாம்பரம் அருகே இவர் மீது கனரக வாகனம் ஒன்று இடித்து தள்ளிவிட்டுச் சென்றது. அதில் படுகாயமடைந்தார் அமுதா. தொடர்ந்து இவருக்கு பல மிரட்டல்களும் வந்துள்ளன. அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து மணல் கொள்ளை, கல்குவாரி ஆகியவற்றிற்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
ரீல் ஹீரோ அமுதா
1990 - களின் இறுதியில் அமுதா ஐஏஎஸ் செங்கல்பட்டில் பணிபுரிந்தார். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீட்டு மனை விலை தாறுமாறாக உயரத் தொடங்கிய சமயத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்தார். விலை ஏற்றம் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த பண அதிபர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்டவர்கள் அரசு இடங்களை வீட்டு மனையாக மாற்றி சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனர். அச்சமயத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வந்த அமுதா துணிச்சலாக அரசு இடங்களை மீட்டார்.
அச்சமயத்தில், செங்கல்பட்டு நகரம் முழுவதும் ஆக்கிரமிப்பால் நிறைந்திருந்தது. சாலை மற்றும் மார்க்கெட் பகுதி ஆகியவை முழுமையாக ஆக்கிரமிப்பாளர்களால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது . செங்கல்பட்டு நகரத்தில் , இருந்த அனைத்து விதமான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை துணிந்து அகற்றினார் அமுதா. செங்கல்பட்டு மார்க்கெட்டில் பெரும்பாலான பகுதிகளை " ரொட்டிக் கடை சேகர் " என்பவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். இவர் நகர மன்றத் துணை தலைவராக இருந்த குரங்கு குமார் என்பவரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அமுதா முடிவு செய்தார்.
ஜேசிபியை இயக்கிய ஐஏஎஸ்
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது, பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. சேகர், குமார் உள்ளிட்டோர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் பிரச்சினை செய்தார். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்த ,ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை இயக்க அதன் உரிமையாளர்கள் மறுத்தனர். இதனையடுத்து தானே எந்திரங்களை இயக்க முடிவு எடுத்தார் அமுதா. சினிமா பாணியில் வாகனங்களை இயக்க தொடங்கியபோது, உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை இயக்க ஒப்புக் கொண்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினார். இச்சம்பவத்திற்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டிதொட்டியெங்கும் அமுதாவின் பெயர் பரவியது.
சென்னை பெருவெள்ளம்
2015 ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது இவரது களப்பணிகள் பரவலாக பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது பெருவெள்ளத்திற்கு காரணமான நீர் செல்லும் வழிகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இடிக்கச் சொல்லி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். விரைவாக செயலாற்றி துணிச்சல் மிகுந்த முடிவுகளை எடுப்பவர் என்பதால்தான், அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் அதிகாரிகள் குழுவில், சிறப்பு அலுவலராக அமுதா நியமிக்கப்பட்டார். அப்போது திறம்பட செயலாற்றிய அவர் ஏராளமான மக்களை வெள்ள பாதிப்புகளிலிருந்து மீட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், ஏற்கனவே இருந்த அனுபவம் மற்றும் துணிச்சல் காரணமாகவே, அந்த சமயத்தில் இவருக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் குரல்
மேலும், அமுதா சாமானிய மக்களின் குரலாக ஒலித்து வந்தார். பெரிய மனிதர்களின் சிபாரிசு இல்லாமல் சாமானிய மக்களுக்கு, உதவிகள் புரிந்தார். செங்கல்பட்டில் துணை ஆட்சியராக இருந்தப்பொழுது அமுதா வருகிறார்கள் என கேள்வி பட்டாலே, ஆக்கிரமிப்பாளர்கள், மணல் கொள்ளையர்கள் உள்ளிட்டோர் அலறிக் தலைமறைவான காலம் அது. இந்தநிலையில் , பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்த அமுதா ஐஏஎஸ், தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே மத்திய அரசு அவரை பணியிலிருந்து , மீண்டும் தமிழநாடு பணிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலராக அமுதா ஐ.ஏ.எஸ் சிறப்பாக பணியாற்றி வந்தார். தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் , அதேபோன்று திட்டங்கள் வீணாகாமல் இருப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார்.
பல் பிடுங்கப்பட்ட விவகார விசாரணை
மேலும், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக இந்த விவகாரத்தில் 24 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளியாகியுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றத்தில் அமுதா ஐஏஎஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதன்படி அமுதா ஐ.ஏ.எஸ். உள்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.