”அறிவொளி இயக்கம் முதல் உத்தபுரம் போராட்டம் வரை” - இது திருப்பரங்குன்றம் பொன்னுத்தாயின் பயோடேட்டா!
அதிமுகவின் ராஜன் செல்லப்பா மற்றும் அமமுகவின் வேட்பாளரும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகனுமான டேவிட் அண்ணாதுரையை எதிர்த்துக் களமிறக்கப்பட்டிருக்கிறார் பொன்னுத்தாய். மற்ற இரண்டு வேட்பாளர்களையும் எதிர்கொள்ளும் அளவுக்கு பொன்னுத்தாய் பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பற்றவர் என்றாலும் அவர் மக்கள் வேட்பாளர் என்கிற அடையாளமே அவருக்குப் பெரும்பலம் என்கிறார்கள் திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து ஆறு இடங்களில் போட்டியிடுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் ஆறு வேட்பாளர்களில் மிக முக்கியமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பவர் திருப்பரங்குன்றம் பொன்னுத்தாய். அந்தத் தொகுதியில் அதிமுகவின் ராஜன் செல்லப்பா மற்றும் அமமுகவின் வேட்பாளரும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகனுமான டேவிட் அண்ணாதுரையை எதிர்த்துக் களமிறக்கப்பட்டிருக்கிறார் பொன்னுத்தாய்.
மற்ற இரண்டு வேட்பாளர்களையும் எதிர்கொள்ளும் அளவுக்கு பொன்னுத்தாய் பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பற்றவர் என்றாலும் அவர் மக்கள் வேட்பாளர் என்கிற அடையாளமே அவருக்குப் பெரும்பலம் என்கிறார்கள் திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். தனது இணையருடைய ஆட்டோவில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேர்தல் வேட்பாளர் என்பதையும் கடந்து மக்கள் பணியாளர் என்பதற்காகவே நாம் பொன்னுத்தாய் பற்றி மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
யார் இந்தப் பொன்னுத்தாய்?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசியல் பின்புலம் அல்லாத சாதாரண குடும்பத்தில் நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களில் மூத்த பிள்ளையாகப் பிறந்தவர் பொன்னுத்தாய். கல்லூரி காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவொளி இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு 1994ல் கட்சிப்பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர். இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் வழியாகப் பல களப்பணிகளை மேற்கொண்டவர். அதே ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தான் சந்தித்த சகதோழர் கருணாநிதி என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இணையர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், பெயர் ராகுல் மற்றும் இலக்கியா.
பொன்னுத்தாயின் முக்கியக்களப்பணிகள்
பொன்னுத்தாய் தற்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். பெண் குழந்தைகளின் மீதான வன்முறைக்கு எதிராக அமைப்பின் மதுரைப் புறநகர் மாவட்டச் செயலாளராகத் தொடர்ந்து இயங்கி வருகிறார். மதுரை புறநகர் மாவட்டம் பொதும்பு அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, அந்தப் பள்ளித்தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் வரை அந்த விவகாரத்தில் முழுக்க முழுக்கக் களப்பணியாற்றியவர். பொன்னுத்தாயின் தலையீட்டில் அந்தத் தலைமை ஆசிரியருக்கு ஐம்பது ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 200 மாணவர்களுக்கு நஷ்டஈடும் பெற்றுத்தரப்பட்டது. உத்தபுரம் தீண்டாமைச்சுவர் வன்முறை உலகத்துக்குத் தெரியவந்தபோது அந்தச் சுவரை இடிப்பதில் முன் நின்ற தலைவர்களில் இவரும் ஒருவர். அப்போது மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசாரின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டவர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பூ விவசாயம் அதிகம். தான் தேர்தலில் வெற்றிபெற்றால் அந்தத் தொகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான செண்ட் தொழிற்சாலைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கிறார் இந்த மக்கள் வேட்பாளர்.