Lime Peel Uses:எலுமிச்சை பழத்தோலில் இவ்வளவு விஷயம் இருக்கா? இனி தூக்கிப் போடாதிங்க - இதைப் படிங்க!
எலுமிச்சைப் பழ தோலைக் கொண்டு எப்படி தோசைக் கல்லை சுத்தம் செய்வது என்பது குறித்தும் பித்தளைப் பாத்திரத்தை சுத்தம் செய்வது குறித்தும் பார்க்கலாம்.
நாம் எலுமிச்சை பழ சாறுகளை பிழிந்த பின் அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம். இனி எலுமிச்சைப் பழத்தோலை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம். எலுமிச்சைப் பழத்தோலை எப்படி உபயோகமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பார்க்கலாம் வாங்க.
தோசைக்கல்லை சுத்தம் செய்ய
சிலருக்கு தோசை எப்படி ஊற்றினாலும் தோசை சரியாகவே வராது. தோசை கல்லில் ஒட்டிக் கொள்ளும். நைஸ் தோசை ஊற்றினால் எடுக்க வராது. இதை சரி செய்ய, ஒரு எலுமிசைப் பழத்தின் சாறு பிழிந்து அதில் கால் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக் கல்லை வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல் லேசாக சூடானதும். நாம் சாறு பிழிந்து விட்டு வைத்துள்ள எலுமிச்சை பழ தோலை எடுத்தை தோசைக்கல் முழுதும் அனைத்து இடங்களிலும் படும்படி தேய்த்துக் கொடுக்க வேண்டும். பின் இதன் மீது சிறிதளவு தண்ணீர் அனைத்து இடங்களிலும்படும்படி தெளித்து ஒரு துணி வைத்து துடைத்துக் கொள்ள வேண்டும். ( தோசைக்கல் அடுப்பின் மீதே இருக்க வேண்டும். கையை சுட்டுக்கொள்ளாமல் கவனமாக இதை செய்ய வேண்டும்)
பின் எலுமிச்சைப் பழத்தின் மற்றொரு பாதி தோலை எடுத்துக் கொண்டு நாம் எலுமிச்சை சாறு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையில் இந்த தோலை தொட்டு தோசைக்கல்லின் அனைத்து பகுதிகளிலும் படும்படி தேய்த்து விட்டு பின் தோசைக்கல்லை கறித்துணியால் பிடித்து இறக்கி வெறும் தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். இப்போது இந்த தோசை கல்லில் தோசை ஊற்றினால் தோசை அழகாக ஒட்டாமல் வரும். உங்களுக்கு எவ்வளவு மெல்லியதாக வேண்டுமானாலும் தோசை ஊற்றிக் கொள்ளலாம்.
பித்தளை பாத்திரங்கள் பளிச்சிட:
கருத்துப் போன பித்தளை பாத்திரங்களை ஓரிரு நிமிடத்தில் பளிச்சென மாற்றி விடலாம். அதற்கு நாம் எலுமிச்சை பழ தோலின் உட்பகுதியில் அரை ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து பித்தளை பாத்திரத்தை தேய்க்க வேண்டும். பாத்திரத்தின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக தேய்த்து கொடுக்க வேண்டும். இதை தண்ணீரில் கழுவி எடுத்தால் பாத்திரம் பள பளவென்று புதிதாக கடையில் வாங்கியதை போலவே இருக்கும்.