(Source: ECI/ABP News/ABP Majha)
திருமணத்தின்போது கன்னித்தன்மையை நிரூபிக்கத் தவறிய மணப்பெண்: அபராதம் விதித்த பஞ்சாயத்து
கன்னித்தன்மையை நிரூபிக்க தவறியதால் மணப்பெண் ஒருவருக்கு கிராம பஞ்சாயத்து ஒன்று அபராதம் விதித்த அவலம் நடந்துள்ளது.
கன்னித்தன்மையை நிரூபிக்க தவறியதால் மணப்பெண் ஒருவருக்கு கிராம பஞ்சாயத்து ஒன்று அபராதம் விதித்த அவலம் நடந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒரு வீடியோ பதிவில் தனது வேதனையைப் பகிர அது இணையத்தில் வைரலானது. இதன் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சான்சி ராஜஸ்தானில் உள்ள பழங்குடியைச் சேர்ந்தவர். அந்த பழங்குடியினத்தின் மரபின்படி மணப்பெண்ணுக்கு குக்கடி ப்ரதா என்ற கன்னித்தன்மை சோதனையை நடத்துவர். அதில் பெண் கன்னித்தன்மை நிரூபணமாகாவிட்டால் உடனே அப்பெண் வீட்டாருக்கு அபராதம் விதிக்கப்படும்.
அதுபோலத் தான் சம்பந்தப்பட்ட பெண்ணுகும் ஒரு துயரம் நேர்ந்தது. கடந்த மே 11 ஆம் தேதி அப்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமண முடிந்தவுடன் அவருக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது அவரது கன்னித்திரை ஏற்கெனவே கிழிந்திருப்பதை அறிந்தனர். இதனையடுத்து பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்தில் மணமகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் தர வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணை அவரது கணவரும், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனையடுத்தே அந்தப் பெண் தான் அனுபவித்துவரும் அவலங்கள் குறித்து ஒரு வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் என்று காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பெண் தனது கணவர் வீட்டாரிடம் தான் ஒரு வருடத்திற்கு முன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும் அது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் பஞ்சாயத்திலும், கணவன் வீட்டாரிடமும் எடுத்துக் கூறியும் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தான் அவர் தனக்கு நேர்ந்த கொடூரங்களை விவரித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வீடியோவின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 498 ஏ, 384, 500, 120பி ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னித்திரை எப்போது, எப்படி கிழியும்?
காலங்காலமாக பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும் போது தான் கன்னித்திரையில் கிழிசல் உண்டாக வேண்டும். அப்பொழுது ஏற்படுவது தான் கன்னித்தன்மை இழப்பு என்று பொதுமைப்படுத்தி, அத்துடன் குடும்ப கவுரவத்தையும் சேர்த்து மொட்டைத் தலைக்கு முழங்காலுக்குமான முடிச்சு ஒன்று போட்டு வைத்துள்ளனர். ஆனால், பெண்கள் சைக்கிள் ஓட்டுவது, ஜிம்னாஸ்டிக் செய்வது, கடுமையான உடற்பயிற்சி செய்வது, மாதவிடாயின் போது டாம்பூன் பயன்படுத்துவது, சுய இன்பம் காண்பது இவற்றால் கூட பெண்களின் கன்னித் திரை கிழியலாம். அதுமட்டுமல்லாமல் சில பெண் குழந்தைகள் பிறக்கும் போதே கன்னித்திரை இல்லாமல் பிறக்கிறார்கள். பெண்களின் கன்னித்தன்மையை உறுதிப்படுத்தக் கூடிய மருத்துவ சோதனைகள் எதுவுமில்லை. எனவே கன்னித்திரை கிழிசல் என்பது இயற்கையான ஒன்றாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.