மேலும் அறிய
Advertisement
Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
இடியாப்ப சிக்கலுடன் பர்மாவில் இருந்து 10 குழந்தைகளுடன் கிளம்பிய பாட்டியும், மகளும் 10 பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.
கிருஸ்துவ தேவாலயத்தின் அலங்கார விளக்குகள் மின் மினி பூச்சி மாதிரி ஜொலித்தது. பர்மா இடியாப்ப கடையில அரிசி இடியாப்பம் மதுரை மல்லி மாதிரி ஒரு பூப்போல பூத்துக் கொண்டிருந்தது. கோழி கொண்ட பூவு நிறத்தில் ராகி இடியாப்பம் இன்னொரு தட்டுல தயாரா வெந்து கொண்டிருந்தது. இடியாப்பத்துக்கு கார சட்டினி ஒருபக்கம், தேங்காபாலு இன்னொரு பக்கம்னு வேலை பரபரனு ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைய தொட்டில போட்டு ஆட்டுற மாதிரி இடியாப்ப மாவ இளைஞர்கள் லேசா தாலாட்டிக் கொடுத்தனர். இடியாப்பம் வேக, வேக தட்டில் வைத்துக் கொடுக்கிறார் தேவிகா. சாப்பிட்டு நிம்மதி பெருமூச்சுடன் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
மதுரை என்றால் கறி தோசை, நண்டு ஆம்லேட், கலக்கி, கோழி ரசம் என காரசார அசைவ உணவு மட்டுமில்ல, வயித்துக்கு இதமா இட்லியும், இடியாப்பமும் சுவையா கிடைக்கும் என்பது தான் உண்மை. மதுரை கீழவெளி வீதியில் சி.எஸ்.ஐ மிஷன் ஹாஸ்பிட்டல் எதிரே உள்ளது பர்மா இடியாப்பக் கடை. பத்துக்கு பத்து அளவு கூட இருக்காது அந்த அளவுக்கு சின்ன கடை. அங்கதான் காலையும், மாலையும் சூடா.. சுவையான இடியாப்பம் கிடைக்கிறது. மதுரையில் பல இடங்களில் பர்மா இடியாப்பக் கடை விரிவு பெற்றாலும் இந்த கடைக்கென்று தனி கூட்டம் இருக்கத் தான் செய்கிறது. சாலை ஓரம் லேசா நிற்கும் அளவிற்குத்தான் இடம் இருக்கிறது. அந்த இடத்தில் நின்று கொண்டு பார்சல் பெற்றுக்கொண்டும் அங்கேயே சாப்பிட்டும் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள். முகம் சுளிக்காத தேவிகா அக்கா.. சுறுசுறுப்பாக வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்.
கூட்டம் குறைஞ்சதும் அவருக்கு கிடைத்த கொஞ்ச நேரத்தில் பேசினார். “ஒரு சமயத்தில் பர்மாவில் பயங்கர தாக்குதல்கள் ஏற்பட்ருச்சு. அப்போது அங்கிருந்து தமிழர்களும் விரட்டி அடிக்கப்பட்டார்கள். விபரம் தெரியாத வயதில் நாங்களும் இந்தியாவிற்கு வந்துட்டோம். அப்போதே எங்கள் அப்பா இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துட்டாக. நாங்கள் மொத்தம் 10 பேரு... 4 ஆம்பளைகளும், 6 பொட்டபிள்ளைகளும் இருந்தோம். அம்மாவை பெற்ற எங்க பாட்டி தான் இரக்கப்பட்டு எங்கள வளர்த்துச்சு. அம்மாவும் பாட்டிக்கு ஒத்தாசயா இருந்தாக. பாட்டி பிச்சையம்மாள் பர்மாவில் இருக்கும் போதே இடியாப்பம் அவிக்கிறதுல லெஜெண்ட்.
எங்க அம்மா பேச்சியம்மாளும் பாட்டி கூட சேர்ந்து வேலை பார்த்தாக. தீராத கஷ்டம். பர்மாவில் செலவு செய்ய முடியாத அளவிற்கு பணம் இருந்தாலும் எல்லாத்தையும் பறித்துக்கொண்டு தான் எங்கள விரட்டிவிட்டாங்க. பாதி நாள் முகாமில், அங்க, இங்கேனு அலைந்த போது இடியாப்ப கடை தான் எங்கள காப்பாத்துச்சு. பாட்டி சுட்ட இடியாப்பம் தான் எங்கள வளர்த்துச்சு. அதுக்கு பின்னாடி அதை அம்மா எடுத்து நடத்துனாங்க. தெரு ஓர கடையாக இருந்தாலும் கூட்டம் பிச்சுக்கும் அம்மாவுக்கு உதவியா அக்கா தங்கச்சி அண்ணனுங்க என்று எல்லாரும் இருந்தோம். பின்பு எல்லாரும் முன்னேறி நல்ல நிலைமைக்கு வந்துட்டாங்க ஆனாலும் நாங்க பர்மா கடையவிடல. நானும் என் அக்காவும் பர்மா கடை என்ற பெயரில் இடியாப்பக் கடையை ஆரம்பித்துவிட்டோம். 1982ல் என்னுடைய கடைய ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் இடியாப்பத்த அதே சுவையில் வழங்குகிறேன். என் கடைக்கு எதுக்க பர்மா இடியாப்ப கடை போட்ருக்கது என் சகோதரி தான்.
இப்படி பல இடங்களில் கடை எங்க சொந்தங்களால் வளந்துருச்சு. எனக்கப்பறம் என் பையன் தனியா நரிமேட்டில் கடைவச்சுருக்கான். ஆண்டவன் புண்ணியத்தில் எல்லோரும் நல்லா இருக்காங்க. என் மகன் கடையில் ‘நான் வெஜ்’ கூட கிடைக்குது. ஆனா என் கடையில் எப்பவும் வெஜ் இடியாப்பம் மட்டும் தான்(சிரிக்கிறார்). இட்லிய விட லேசா இருக்கும் நம்ம இடியாப்பம். காலை 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை கடை இருக்கும், மறுபடியும் சாயிந்தரம் 4 டூ 10 மணி வரை கடை இருக்கும். மதுரைக்கு வரும் பலருக்கும் நம்ம கடையின் இடியாப்பம் பிடிக்கும், பெரும் ஹோட்டல் முதலாளிகள் கூட நம்ம இடியாப்பத்த விரும்பி சாப்பிடுவாங்க. சினிமா நடிகர்கள் பலரும் நம்ம இடியாப்ப கடைய கேட்டு பார்சல் வாங்கிவரச் சொல்லி சுவைப்பார்கள்” என்றார் பெருமிதத்துடன்.
இடியாப்ப சிக்கலுடன் பர்மாவில் இருந்து 10 குழந்தைகளுடன் கிளம்பிய பாட்டியும், மகளும் 10 பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். தற்போது நான்காவது தலைமுறையாக இடியாப்ப வியாபாரம் தொடர்கிறது. அவித்த பொருள் என்பதால் விரைவாக செரிமானம் ஆகிவிடும் என குழந்தைகளும், பெரியவர்களும் அவர்களுக்கு சுவைக்கு ஏற்ப சைடிஸ்கள் வைத்து சுவைக்கின்றனர். நீங்களும் ஒரு நாள் சுவைத்து பார்க்கலாமே இந்த மதுரை பர்மா இடியாப்பத்தை...
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion