Health Tips: தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு வெங்காயச்சாறு சிறந்த மருந்து: இத்தனை வழிமுறைகளா?
தலைமுடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது.
தமிழர் வாழ்வியலில், வெங்காயத்திற்கென்று தனி இடம் ஒன்று உள்ளது. வெங்காயம் இல்லாமல் காலையிலிருந்து இரவு வரை எந்த ஒரு உணவுப் பொருளும் சமைக்கப்படுவதில்லை. ஒருவேளை காலையில் எந்த உணவையும் சமைக்காமல், முந்தைய தினம் மீந்து போன, சோற்று கஞ்சியை சாப்பிடுவதாக இருந்தாலும் கூட, தொட்டுக்கொள்ள, சிறிய வெங்காயம் தேவையாக இருக்கும். இப்படி வெங்காயத்தின் மகத்துவத்தை உணர்ந்த தமிழர்கள், வெங்காயத்தை நேரடியாகவோ அல்லது சமைத்தோ உணவில் சேர்த்துக்கொண்டனர்.
இன்று இளம் வயதிலேயே தலை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைவது மற்றும் வழுக்கை விழுவது என பலருக்கும் முடி சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடு, இரும்புச்சத்து குறைவது, ஹார்மோன் பிரச்சினை, மன உளைச்சல் மற்றும் பரம்பரை பரம்பரையாக முடி குறைவாக இருப்பது என நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன . ஒருவருக்கு தினமும் ஆக குறைந்தது,100 முடிகள் உதிர்கிறது என்று வைத்துக் கொண்டால் அவருக்கு கூடுதல் கவனம் தேவை. இதை சரி செய்ய வெங்காய சிகிச்சையானது, சிறப்பான பலனை தருகிறது. பொதுவாக வெங்காயம் 3 வகைகளில் கிடைக்கிறது.
வெள்ளை வெங்காயம், சிவப்பு வெங்காயம் சிறிய வடிவில் இருக்கும் சாம்பார் வெங்காயம் மூன்றிலுமே ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள் உள்ளன. பொதுவாக வெங்காயத்தில் கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதிலும் சாம்பார் வெங்காயத்தில் சல்ஃபர் மற்றும் கால்சியத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.
மேலும் வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் தன்மை உள்ளது என சொல்லப்படுகிறது. வெங்காயச்சாறினை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது முடி உதிர்வை நீக்கி ,கூந்தல் அடர்த்தியாக வளர்கிறது என ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
தலைமுடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது. வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற வேதிப் பொருள் முடியின் வேர்களை பலப்படுத்தி, உதிர்வதை தடுத்து, கூந்தலை வளரச் செய்கிறது. வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கடைகளில் வாங்கும் எண்ணெய்களை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் வெங்காய சாறினை பயன்படுத்துவது பக்க விளைவுகளை தடுக்கும்.
வெங்காய சாற்றினை தயாரித்து எவ்வாறு பயன்படுத்துவது:
சிறிதளவு சிறிய வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றை தோல் நீக்கி,மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த இந்த கலவையை, வடிகட்டி சாற்றை ஒரு கொள்கலனில் அடைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது இந்த சாற்றை தலை முழுவதும் முடியின் வேர்க்கால்களில் படுமாறு சுழல் வடிவில் விரல்களினால் நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் கெமிக்கல்கள் அதிகம் இல்லாத ஒரு ஷாம்புவை கொண்டு,தலை முடியை சுத்தம் செய்யுங்கள். ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள்ளாக நல்ல பலனை காணலாம்.
வெங்காயத்தை போலவே, கருவேப்பிலையும்,முடி வளர்ச்சிக்கும், முடிக்கு நல்ல கருமையையும் தருகிறது. ஆகையால் இந்த கருவேப்பிலையை,வெங்காய சாற்றுடன் பயன்படுத்தி,பலன்களை பெறலாம். இதற்கு முதலில் உங்கள் தலை முடிக்கு ஏற்றவாறு,ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி கருவேப்பிலையை,நன்றாக வெண்ணெய் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொண்டு,இரண்டு அல்லது நான்கு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காய சாரினை கலந்து,இந்த கலவையை உங்கள் தலைமுடியின், வேர்க்கால்களில் படும்படி தடவி விட்டு, 45 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.பின்பு கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி தலை முடியை கழுவுங்கள். இதன் மூலம் கருமையான அடர்த்தியான மற்றும் வலுவான முடியை பெறலாம்.
வெங்காயச் சாற்றினை,வெவ்வேறு விதங்களில் தயாரித்து,அதற்கான பலன்களை எளிதாக பெறலாம். மற்றொரு முறையில், நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு,நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன்,அந்த நீரை வடிகட்டி தலையில், முடியில் வேர்க்கால்களில் படும்படியாக நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கெமிக்கல்கள் அதிகம் இல்லாத ஷாம்பு போட்டு தலைமுடியை அலசினால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.
கொதிக்கும் தேங்காய் எண்ணெயில், சின்ன வெங்காயச் சாறு கலந்து, தலையில் தடவலாம். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
தலை முடி வளர்ச்சிக்கும், நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும்,சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.
நம் உடல் இயற்கையாகவே ஹைட்ரஜன் பெரக்சைடு சுரக்கும் தன்மைகொண்டது. இது அதிக அளவில் சுரக்கும்போது நரை முடி உருவாகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடின் சுரப்பை கட்டுப்படுத்தி முடி கருமையாகவும்,அடர்த்தியாகவும் வளர்வதற்கு வெங்காயமானது பயன்படுகிறது.
வெங்காயச் சாற்றை தொடர்ந்து வாரம் இரண்டு முறை தலையில் தடவிவர பொடுகு, பேன் மற்றும் ஈறு ஆகியவற்றை நீக்குகிறது.
தலை முடியில் பூச்சி வெட்டு காரணமாக, ஆங்காங்கே முடி வளர்ச்சி இன்று இருக்கும்.இது பலருக்கு மன உளைச்சலை தரும். இதை சரி செய்ய வாரத்திற்கு மூன்று முறை,25 கிராம் அளவுள்ள, வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து,அதைத் தலையில் முடியின் வேர்க்கால்களில் படும்படியாக தடவி, நன்கு மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் தலையில் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும். இப்படி, குறைந்தது மூன்று மாதங்களாவது தொடர்ந்து செய்து வந்தால், தலையில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிந்து,புதிய முடி வளரும்.