Chennai IIT : உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்காக புதிய மென்பொருள்..! சென்னை ஐ.ஐ.டி. சாதனை...
ஐஐடி மெட்ராஸ் தகவல் தொழில்நுட்பக் கருவி(IT Tool) ஒன்றை உருவாக்கி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே கிராமப்புற பட்டியலின மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகிறது
ஓபன் சோர்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடி கருவி, குடும்ப அளவிலான வருடாந்திர ஆரோக்கியம் தொடர்பான விரிவான தகவல்களைச் சேகரிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. ஒருவருக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரப் பிரச்சனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உணவு பட்டியலின் பரிந்துரை ஆகியவற்றின் தாக்கம் குறித்து கணக்கிட இந்த 'ஐடி டூல்' பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சையின் செயல்திறன் மற்றும் செலவுகளின் அடிப்படையில், சிறந்த கிராமப்புற சுகாதாரத் திட்டம் ஒன்றை உருவாக்க இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
சித்தூர் :
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பகஜா மற்றும் புலிசேர்லா மண்டல்களில் உள்ள, இ.பாலகுட்டப்பள்ளி எஸ்சி மற்றும் அதனை ஒட்டியுள்ள குக்கிராமங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அங்குள்ள மக்கள் கடந்த காலங்களில் கேழ்வரகு மற்றும் தினை வகைகள், பால் பொருட்கள், மீன் போன்ற நீர்வாழ் இறைச்சியை உணவாகக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது வறுமை காரணமாக பருப்பு, பால் பொருட்கள், இறைச்சி உள்ளிட்டவை ஏதுமின்றி வறண்டுபோன, மோசமான உணவை அங்குள்ள மக்கள் உட்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் ரத்தசோகையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், எஸ்.வி. ஆயுர்வேதா கல்லூரியின் ஹர்நாத் சாரி, டாக்டர் ஞான பிரசூனாம்பா ஆகியோரைக் கொண்ட மருத்துவர் குழுவினர், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட கிராமங்களுக்குச் சென்று புதிய திட்டத்தைத் திறம்பட செயல்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உணவு ஆலோசனைகளை வழங்கினர். அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஐஐடி மெட்ராஸ்-ன் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. ஒவ்வொரு மாத இடைவெளியில் காணொலி வாயிலாக நேரடிக் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
ஐடி டூல்ஸ் :
சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட கிராமங்களில், ஐடி டூல்ஸ்-களைக் கொண்டு சுகாதார நிலை மற்றும் உடல்நலத்திற்கான செலவினங்கள் ஆகியவை குறித்த விரிவான அடிப்படைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. மருத்துவ சிகிச்சை அளித்தல் உணவு ஆலோசனை வழங்குதல் மற்றும் அவற்றைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கு ஐடி டூல்ஸ்-கள் பயன்படுத்தப்பட்டன. அங்குள்ள மக்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பின்னரும் ஐடி டூல்ஸ்-களைக் கொண்டு கணக்கெடுப்பு, உடல்நிலை மற்றும் செலவினங்கள் ஒப்பிடப்பட்டதாக, மெட்ராஸ் ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐஐடி வடிவமைத்த ஐடி-டூல்ஸ் உதவியுடன் நடந்த ஆய்வு
அடுத்த கட்ட உத்தேசப் பணிகள்:
டிஜிட்டல் மயமாக்குவதற்கும், சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்வதற்கும் ஏற்ற வகையில் மொபைல் செயலி பயன்பாட்டை அமல்படுத்தவும், உள்ளூரைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்களின் உதவியுடன் மொபைல் செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரத்தசோகை மற்றும் பலவீனம் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு உரிய பிரத்யேக மருந்து கண்டுபிடிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ளவும்,மருத்துவ முகாம்களின் ஒரு பகுதியாக நோயாளிகளை ஒழுங்கமைத்துக் கண்காணிப்பதுடன் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமீன் ஆயுர்வேதிக் மொபைல் செயலி
ஒரு நபரின் ஒட்டுமொத்த சுகாதாரத் திட்டத்தை ஆண்ட்ராய்டு முறையில் கண்காணிக்கும் வகையில், கிராமீன் ஆயுர்வேதா மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மருத்துவர்களின் சந்திப்புக்கான நேரம் ஒதுக்கச் செய்தல், டிஜிட்டல் வடிவில் காப்புரிமை தரவை பராமரித்தல் ஆகியவற்றுக்கு இந்த மொபைல் செயலி பயன்படுவதுடன், நோயாளியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை பதிவுகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது. தேவைப்படும் பட்சத்தில் நோயாளிகளை வழக்கமான மறுபரிசோதனைக்கு நினைவூட்டலும் கிராமீன் செயலி மூலம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேதாவில் உள்ள முக்கிய அம்சங்களைப் புகுத்துவதால் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என நம்புவதாக, ஐஐடி மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் சி.லட்சுமண ராவ் தெரிவித்துள்ளார். கிராமீன் ஆயுர்வேதா செயலி நமது வீடுகளில் நாம் காணும் மூலிகைகள் பற்றிய அரிய தகவல்களுடன், உடல்நலம் குறித்த ஆலோசனைகளையும் வழங்குகிறது என்றார். நோயை அதன் வேர்களில் இருந்து குணமடைய இது உதவிகரமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.