House Hold Tips: 10 ரூபாயில் துணி துவைக்கும் லிக்விட் தயாரிக்கலாம்.. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!
வீட்டிலேயே எப்படி டிடர்ஜெண்ட் லிக்விட் தயாரிப்பது என்றும் பயனுள்ள வீட்டுக் குறிப்புகளையும் பார்க்கலாம்.
எலுமிச்சையில் அதிக சாறு பிழிய
எலுமிச்சை பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க நாம் அதை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவோம். இந்த எலுமிச்சை பழத்தை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஜூஸ் பிழிந்தால் அது கடினமாக இருக்கும். எனவே சாறு சரியாக பிழிய முடியாது. எனவே இந்த எலுமிச்சை பழத்தை இரண்டு நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு வைத்து பின்பு எடுத்து சாறு பிழிந்தால் நன்றாக சாறு வரும்.
வீட்டிலேயே ஸ்கிரப்பர் தயாரிக்கலாம்
நாம் வீட்டில் தேங்காய் உடைத்தால் அந்த தேங்காய் நாரை தூக்கி வீசி விடுவோம். ஆனால் இனி தேங்காய் உடைத்தால் அந்த நாரை சிறிது சிறிதாக பிய்த்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு அல்லது 3 கைப்பிடி அளவு நாரை எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு சிறிய கைக்குட்டை அளவு துணியில் சேர்த்து நூல் கொண்டு ஒரு சிறிய மூட்டைப் போல் கட்டிக் கொள்ளவும். பின் இதை பாத்திரம் தேய்க்கும் லிக்விடில் தொட்டு வழக்கம் போல் பாத்திரம் தேய்க்கலாம். இப்படி பயன்படுத்துவதால் உங்களுக்கு ஸ்கரப்பர் வாங்கும் செலவு மிச்சம்.
டிடர்ஜண்ட் லிக்விட் தயாரிக்கும் முறை
ஒரு 10 ரூபாய் துணி சோப்பை காய் சீவலை பயன்படுத்தி துருவிக்கொள்ளவும். முக்கால் லிட்டர் அளவு தண்ணீரை சுட வைத்து அதில் துருவிய சோப்பை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, துணிக்கு வாசனைக்கு பயன்படுத்தும் திரவம் இரண்டு ஸ்பூன் அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த வாசனையிலுள்ள ஷாம்பூ இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை ஒரு குச்சி அல்லது கரண்டி பயன்படுத்தி நன்றாக கலக்கி விடவும். இந்த கலவை ஆறியவுடன் இதை ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த லிக்விடை பயன்படுத்தி துணி துவைத்தால் துணி பளீச்சென இருப்பதுடன், நல்ல வாசனையாகவும் இருக்கும். முக்கால் லிட்டர் லிக்விடை நீங்கள் கடையில் வாங்க வேண்டும் என்றால் சுமார் 150லிருந்து 200 வரை செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த லிக்விடை நீங்கள் 10 லிருந்து 15 ரூபாய் செலவில் தயாரித்து விடலாம்.