Green Tea Benefits | கொரோனாவை கட்டுப்படுத்துமா க்ரீன் டீ? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
பரவலாக பலராலும் குடிக்கப்படும் க்ரீன் டீ கொரோனா வைரஸுக்கும் எதிராக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
நல்லதோ, கெட்டதோ, மழையோ, வெயிலோ நம் ஊரில் எல்லா இடத்திலேயும் இடம்பெற்றிருக்கும் ஒன்றுதான் டீ.
இயல்பாக ஒருநாளை பலர் தேநீருடன் தான் தொடங்குவார்கள். அதிலும் குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் குறிப்பாக ஊரடங்கு காலத்தில் அதிகம் மிஸ் செய்வது அலுவலகத்தின் தேநீர் இடைவேளையைத்தான். அது அந்த அளவுக்கு அவர்களின் அலுவலக வாழ்வியலில் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருந்த பொருளாக இருந்தது. அலுவலகம் செல்பவர்கள் மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் ஒரே மருந்து தேநீர்தான்.
இந்தியாவில் ஒவ்வொரு இடமும் தேநீரை ஒவ்வொரு விதத்தில் ரசித்துக் குடிக்கின்றனர். பால் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என டீயின் வகைகள் நீண்டுகொண்டே போகும். அனைத்துமே நமக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுக்கிறது. புத்துணர்ச்சி என்பதை தாண்டி மூலிகை டீ, லெமன் டீ போன்ற டீ வகைகள் உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் பரவலாக பலராலும் குடிக்கப்படும் க்ரீன் டீ கொரோனா வைரஸுக்கும் எதிராக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
பொதுவாக க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும், முகம் பொலிவு பெறும் என்று சொல்வார்கள். கொடூர கசப்பாக இருந்தாலும் காலையில் க்ரீன் டீ குடித்துவிட்டு யோகா, உடற்பயிற்சி செய்யும் நபர்களும் அதிகம். முக பொலிவு மட்டுமல்ல இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் கிரீன் டீ எதிராக நிற்கும் என்பதும் உண்மைதான். அந்த வரிசையில் க்ரீன் டீ இப்போது கொரோனாவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறதாம்.
ஆர் எஸ் சி அட்வான்சஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட ஆய்வு முடிவின்படி,க்ரீன் டீயில் உள்ள மூலக்கூறுகள் SARS-CoV-2வை கட்டுப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவின்படி க்ரீன் டீ எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துகிறது என மருத்துவர் சுரேஷ் மோகன்குமார் என்பவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர் இது குறித்து தெரிவித்துள்ள அவர், க்ரீன் டீயின் மூலக்கூறுகளின் ஏதேனும் ஒன்று கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறதா? என்பதை தெரிந்துகொள்ள மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது. தற்போது வெளியான ஆய்வு முடிவுகள் ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி வெளியானதுதான். எனவே மேலும் பல தகவல்களை தெளிவாக கூற வேண்டுமென்றால் ஆய்வில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றார்.
க்ரீன் டீ தொடர்பாக ஆய்வு தேவைப்படும் அதேவேளையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க லெமன் டீ உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சையில் விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியாக சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன. அதேபோல தேயிலை தூளும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக உள்ளது.