Parenting | ’இப்படித்தான் கொண்டாடினேன்!’ - பெற்றோருக்காக இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி சொன்ன அட்டகாசமான டிப்..
பொறியாளர், எழுத்தாளர், பேராசிரியர், சமூகத் தொண்டாற்றுபவர் என்று பல முகங்களை உடையவர் சுதா.
பெண்களின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் என்று பல அறிஞர்கள் தொடர்ந்து சொல்கின்றனர். ஐ.நா அமைப்பு கூட பெண்கள் முன்னேற்றத்தை இலக்காக வைத்து அதை நோக்கிப் பயணிக்கத் தனது நெடுநாள் வளர்ச்சித் திட்டத்தில் இதைச் சேர்த்துள்ளது. பெண்கள் பல துறைகளில் இன்று சிறந்து விளங்கத் தொடங்கிவிட்டாலும் அவர்களுக்கான சவால்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அதனை எப்படிப் பெண்கள் வெற்றிகரமாக எதிர் கொள்கிறார்கள் என்பதே பெண்களின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும். இந்தக் கருத்துகள் வருவதற்கு முன்னரே சாதாரணமாக இந்தத் தடைகளை உடைத்திருக்கிறார் இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி. பொறியாளர், எழுத்தாளர், பேராசிரியர், சமூகத் தொண்டாற்றுபவர் என்று பல முகங்களை உடையவர் சுதா. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டெல்கோ நிறுவனத்தில் பணியாற்றிய முதல் பெண் பொறியாளரும் சுதாதான்.
அண்மையில் ஒரு சந்திப்பில் தன் மகனுடைய பிறந்தநாளைத் தான் கொண்டாடிய விதம் குறித்துப் பகிர்ந்திருந்தார் அவர். “என்னுடைய மகன் அவனுடைய நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று பிரம்மாண்டமாக ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. அதற்குப் போய்விட்டு வந்து தனக்கும் அதுபோல பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றான். நான் முடியாது என மறுத்தேன். அப்படி பிறந்தநாள் கொண்டாடினால் அதற்குக் குறைந்தது ஐம்பதாயிரமாவது செலவாகும். அந்தப் பணத்தில் எங்கள் வீட்டில் கார் ஓட்டுநர் அவருடைய பிள்ளைகளை இன்னும் சிறப்பான பள்ளியில் படிக்கவைக்க முடியும்.அதனால் உனக்கு பிறந்தநாளுக்கு சமோசாவும் ப்ரூட்டியும் வாங்கித்தருகிறேன் என்றேன்.சரியென ஒப்புக்கொண்டான்.சிலவருடங்கள் கழித்து கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அவனுக்கு ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்தது. ஸ்காலர்ஷிப் பணத்தைப் பிறந்தநாள் கொண்டாடச் செலவழித்துவிடுவானோ என நினைத்தேன்.
ஆனால் நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக அந்தப் பணத்தைக் கொடுத்தான்.நான் பெருமை அடைந்தேன். பிறந்தநாள் எப்போதும்தான் வருகிறது, ஆனால் அவர்கள் இருப்பதால்தான் நாம் உயிரோடு இருக்கிறோம் என அவன் அன்று கூறியபோது நான் பெருமையடைந்தேன். உங்கள் பிள்ளைகள் அவர்களாகவே கற்றுக்கொண்டு வளர்கிறார்கள். இதை ஒரு பெற்றோராக அவர்களது வளர்ப்பில் கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாக நான் பார்க்கிறேன்” என்றார்.
மேலும்,அவர் ஒரு காண்ஃபரன்ஸில் கலந்துகொள்ளும்போது அவரிடம் ஒரு வேடிக்கையான கேள்வி கேட்கப்பட்டது. அது, "உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் சண்டை வருமா?" என்று. அப்போது அதற்கு பதிலளித்த சுதா மூர்த்தி, "நானும் என் கணவரும் சண்டை இடுவதே இல்லை… ஏனெனில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை" என்று கூறி அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார்.
"என் கணவர் 20 நாள் சுற்றுப்பயணம் சென்றுவிடுவார், நான் 22 நாட்கள் சென்றுவிடுவேன், ஒரே நேரத்தில் வீட்டில் இருப்பது ஐந்தாறு நாட்கள் தான், அதிலெப்படி சண்டை போடுவது?" என்று கேட்டார்.