தேங்காயில் ஸ்வீட் பப்ஸ்! இப்படி செய்து பாருங்க - சுவை அருமையா இருக்கும்
தேங்காய் ஸ்வீட் பப்ஸ் இப்படி செய்து பாருங்க சுவை அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு- 200 கிராம்
சர்க்கரை-75 கிராம்
தேங்காய் -1/2 மூடி
ஏலக்காய் -6
நெய்-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு சேர்த்து அதில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறிது நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் மாவை ஒரு ஈரத் துணி போட்டு மூடி வைத்து சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
பிறகு மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒரே அளவிலான சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயை துருவி வைத்துக் கொண்டு அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒவ்வொரு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தேய்த்து அதன் நடுவே இந்த தேங்காய் கலவையை வைத்து பஃப்ஸ் போன்று மடித்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பப்ஸ் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு ஃபப்ஸாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் தித்திப்பான ஸ்வீட் பப்ஸ் தயார்.
தேங்காயின் நன்மைகள்
தேங்காயில் 61% நார்ச்சத்து உள்ளது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. மேலும் மலச் சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படாமல் இருக்க தேங்காய் உதவுகிறது. தேங்காயில் உள்ள கொழுப்பு சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சரும வறட்சி மற்றும் சுருக்கங்கள் தோன்றும் வாய்ப்பை குறைக்க தேங்காய் உதவுகிறது. தேங்காய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்டதால், தொற்று நோய்க்கு எதிராக போராட உடலுக்கு சக்தி அளிக்கிறது.
மேலும் படிக்க