(Source: ECI/ABP News/ABP Majha)
Masala Butter Milk: வெயில் காலம் வந்துடுச்சு.. மசாலா மோர் இப்படி செஞ்சு வெச்சுக்கோங்க..
சுவையான மசாலா மோர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெயில் காலத்தில் மோர் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க நாம் நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களையும் நீராகாரங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு மோர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதிலும் சிலருக்கு வெறும் மோரைக் குடிப்பது பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் மசாலா மோர் குடிக்கலாம். தற்போது மசாலா மோர் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் - 2 மேஜைக்கரண்டி
பச்சைமிளகாய் - 1
இஞ்சி- 1 துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பில்லை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு -1 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
செய்முறை
முதலின் 2 மேஜைக் கரண்டி தயிரை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, அரை கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் சுவையான மசாலா மோர் தயார்.
மோரின் பயன்கள்
உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு பொலிவு ஏற்பட்டு விடும். சருமத்திலுள்ள முக சுருக்கங்களை நீக்குவதுடன் சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.
மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது. மோரில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர் சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்க உதவும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வழக்கமாக சாப்பிடும் உணவுகளின் அளவை குறைத்துக் கொண்டே வருவார்கள். இதனால் நமக்கு உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மோர் குடிப்பது நல்லது. மோர் எளிதில் ஜீரணமாகிவிடும்.
மோரில் புரதச்சத்து அதிக அளவு உள்ளது. புரதம் நம் உடலில் சேரும்போது, நம் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. சில நார்ச்சத்து இல்லாத பொருட்கள் நமக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மோர் குடித்து வருவது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் என்று சொல்லப்படுகின்றது.
எந்தவித மசாலாக்களும் சேர்க்காத மோரில் சிறிது உப்பு மட்டும் கலந்து குடிப்பது மூல நோய் உள்ளவர்களுக்கு நல்லது என கூறப்படுகிறது.