நாய்கள் ஏன் கார்களையும், பைக்கையும் துரத்திக்கிட்டு போகுதுன்னு தெரியுமா?
வீட்டு விலங்குகளான நாய்கள் எவ்வளவு நட்புடன் இருந்தாலும் அவை காடுகளைச் சேர்ந்த விலங்குகளான ஓநாய், நரி மற்றும் குள்ளநரிகளின் குடும்பத்தின் மரபணுவில் இருந்து வந்த விலங்குகள் என்பதை மறந்து விடுகிறோம்
நாய்கள் பழக்கப்பட்ட செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ந்தால் மட்டுமே மனிதர்களிடம் குழைந்து நடந்துகொள்ளும். தனது மனித நண்பனுக்கு நேர்மையாக நடந்துகொள்ளும்.இதுவே தெருவில் வசிக்கும் நாய்கள் அப்படி பழக்கப்படுவதில்லை. சாலையில் போவோர் வருவோரைத் துரத்தும். சாலையில் செல்லும் வாகனங்களைப் பின் தொடர்ந்தபடியே வரும். இதில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு நிகழ்ந்திருக்கலாம். 'ஏன் நாய்கள் உண்மையில் ஓடும் காரைத் துரத்தி குரைக்கின்றன?'என நீங்கள் தற்போது யோசித்துக் கொண்டிருக்கலாம்.
வீட்டு விலங்குகளான நாய்கள் எவ்வளவு நட்புடன் இருந்தாலும் அவை காடுகளைச் சேர்ந்த விலங்குகளான ஓநாய், நரி மற்றும் குள்ளநரிகளின் குடும்பத்தின் மரபணுவில் இருந்து வந்த விலங்குகள் என்பதை மறந்து விடுகிறோம். அவற்றை போலவே இலக்கை நகர்த்துவதன் மூலம் தூண்டப்படும் உள்ளுணர்வுகளைக் கொண்டுள்ளன. இது ஒரு வன்முறை யுத்தி அல்ல, மாறாக இரையைத் தேடுவதற்கும் அதனைப் பின்தொடர்வதற்கும் அதனால் இயல்பாக அதன் உடலில் இருந்து நீர் சுரப்பதும் நிகழ்கின்றன. சில வகை நாய்களில் இந்த இயல்பு மட்டுப்படுத்திக் காணப்படும். வேறு சிலவற்றில் இது அதிகமாக இருக்கும்.
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்குப் பெரும்பாலும் பந்து தூக்கி எறிவதை எடுத்துவரும் விளையாட்டுப் பிடிக்கும். இது அதன் வேட்டையாடும் இயல்போடு தொடர்புடையவை. இந்த இயல்புதான் அதனை பூனைகள், குழந்தைகள், அணில் மற்றும் பிற நாய்களைத் துரத்தத் தூண்டுகின்றன. சில சமயங்களில் சலிப்பினால் கூட அவை எதையேனும் துரத்தும். அல்லது ஏதேனும் புதிய விளையாட்டைக் கண்டுபிடித்து சுவாரசியமாக விளையாடக் கூடும்.
நாய்களுக்கு இயல்பிலேயே மோப்ப உணர்வு அதிகம் இருப்பதால் அவை தங்கள் பகுதியில் ஊடுருவும் நபரை உடனடியாக அடையாளம் காணும். அதனால்தான் கடந்து செல்லும் மோட்டார் வாகனங்களைப் பார்த்து அவை குரைக்கின்றன. நாய்கள் வண்டிகளின் டயர்களில் சிறுநீர் கழிக்கும்போது ஒருவித விநோத துர்நாற்றம் வீசக்கூடும். இந்த வாகனங்கள் வேறு பகுதிகளைக் கடக்கும்போது அதிலிருந்து எழும் நாற்றம் வேறு ஒரு நாய் தனது பிரதேசத்தில் புகுந்துவிட்டதோ என்கிற அச்சுறுத்தலில் அவை அந்த வாகனங்களைப் பின் தொடர்ந்து குறைக்கின்றன.
ஒரு பகுதியில் இருந்து தனது எதிரியை வெளியேற்றுவதை விட ஒரு நாய் அதன் பகுதியில் வேறு எப்படி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும்? ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் கார்களை தனது பகுதியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நாய்கள் தனது பகுதியில் ஆதிக்க செலுத்திவிட்டதாக நினைக்கின்றன.
சில சமயங்களில் நாய்கள் வேட்டையாடுவதற்காகத் துரத்துவதில்லை மாறாக தனக்கு நெருக்கமான பிறநாய் ஏதேனும் வாகன விபத்தில் இறந்திருக்கும் நிலையில் அந்த துக்கம் தாளாமல் விபத்து ஏற்படுத்திய வாகனம் போல வேறு எந்த வாகனத்தைப் பார்த்தாலும் அவை துரத்திச் சென்று குரைக்கக் கூடும்.