Boiled Eggs: வேக வைத்த முட்டைகளை எத்தனை நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம் தெரியுமா?
காலையில் முட்டைகளை வேகவைத்து விட்டு சாப்பிட மறந்து போகிறோம். அவற்றை பல மணி நேரம் கழித்தோ அல்லது இரவில் அல்லது மறுநாள் சாப்பிடலாமா என்று பலர் யோசிக்கிறார்கள். அதனைப் பற்றிக் காணலாம்.

முட்டை ஒரு சத்தான உணவாகும். இதனை சிறு வயதில் இருந்தே நாம் எடுத்துக் கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறோம். முட்டையை கொண்டு ஆம்லெட், பொரியல், வேக வைத்து உண்பது என பல வகைகளில் நாம் எடுத்துக் கொள்கிறோம். கோழி, வாத்து, காடை முட்டை போன்றவை பரவலாக நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
முட்டையில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் வைட்டமின்கள் ஏ,டி, பி12 போன்றவையும், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாதுக்களும் உள்ளது. முட்டை தசை வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. முட்டையானது வெள்ளை நிற அடுக்கு மற்றும் உள்ளே மஞ்சள் நிற கரு ஆகிய வடிவத்தில் இருக்கும். சிலருக்கு முட்டை ஒவ்வாமை என்பதால் மஞ்சள் கருவை விட்டு விட்டு வெள்ளை அடுக்கை மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
சிலருக்கு முட்டை ஒவ்வாமையை உண்டாக்கலாம். இதனால் தோல் அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். அவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் முட்டை சாப்பிடுபவராக இருந்தாலும் அதனை எந்த வேளையிலும் எந்த வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அனைத்தையும் விட அவித்த முட்டை நல்லது என சொல்லப்படுகிறது.
வேக வைத்த முட்டைகளை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்?
இத்தகைய நிலையில் காலையில் முட்டைகளை வேகவைத்து விட்டு சாப்பிட மறந்து போகிறோம். அவற்றை பல மணி நேரம் கழித்தோ அல்லது இரவில் அல்லது மறுநாள் சாப்பிடலாமா என்று பலர் யோசிக்கிறார்கள். ஆய்வுகளின்படி, “சரியாக அவிக்கப்பட்ட முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் 7 நாட்கள் வரை சாப்பிடலாம் என சொல்லப்படுகிறது.
அதாவது முட்டை ஓடு பிரிக்கப்பட்டாலும், பிரிக்கப்படாமல் இருந்தாலும் இது பொருந்தும். ஆனால் 7 நாட்களில் அதன் சுவை மாறும் என்பதால் முடிந்தவரை 2,3 நாட்களில் காலி செய்து விடுவது நல்லது. பாதி வேக வைத்த நிலை அல்லது இலேசாக வேக வைத்தது போன்றவற்றை நீண்ட நேரம் சேமிக்கக்கூடாது. அதனை அன்றைய நாள் அல்லது மறுநாள் காலைக்குள் சாப்பிட வேண்டும் என சொல்லப்படுகிறது.
ஆனால் ஒரு கண்டிஷன் உள்ளது. அதாவது நீங்கள் காலை 10 மணிக்கு ஒரு முட்டையை வேக வைக்கிறீர்கள் என்றால், அதனை நாள் முழுவதும் வெளியே வைத்து பின் சாப்பிடக்கூடாது. முட்டைகளை வேக வைத்தவுடன் அவற்றை குளிர்ந்த நீரில் போட வேண்டும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் குளிர்சாதனப் பெட்டியில் காற்றுப் புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலை எப்போதும் 4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் நல்லது.
முட்டைகளை உரித்து சேமிப்பதை விட அவற்றின் ஓடுகளுடன் சேமிப்பது மிகவும் பாதுகாப்பானது. அதேபோல் பலர் முட்டைகளை ஃப்ரிட்ஜ் கதவில் ஒரு தட்டில் வைப்பார்கள். இது தவறான பழக்கமாகும். கதவைத் திறந்து மூடினால் வெப்பநிலை மாறும் என்பதால் முட்டைகள் விரைவாக கெடும். எனவே காற்றுப்புகாத பாத்திரத்தில் குளிர்சாதன பெட்டி உள்ளே வைக்கலாம்.





















