வங்கி கிளார்க் பணிக்கு காத்திருப்போருக்கு குட் நியூஸ்! காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு, தேர்வு முடிவுகள் விரைவில்
சுமார் 3,200 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வங்கி கிளார்க் காலிப்பணியிடங்கள் 13,533 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான 2025-ம் ஆண்டு மொத்தம் 10,277 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்நிலையில், இதன் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 3,200 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் தகுதியில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பதவிக்கான இந்தாண்டுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி விண்ணப்பம் பெறப்பட்டது. அறிவிப்பில் மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள் இடம்பெற்ற நிலையில், தற்போது 13,533 காலிப்பணியிடங்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையும் 267 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் பொதுத்துறை வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிளார்க் பிரிவில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அறிவிப்பு வெளியாகி, இறுதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்வர்கள் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறிவிப்பில் 894 காலிப்பணியிடங்கள் இடம்பெற்ற நிலையில் தற்போது 1,161 காலிப்பணியிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் தரும் அறிவிப்பு ஆகும்.
அதிகரிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும், வங்கிகளின் விபரமும்...
பரோடா வங்கி 105
இந்தியன் வங்கி 20
மகாராஷ்டிரா வங்கி 40
கனரா வங்கி 450
சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியா 127
இந்தியன் வங்கி 235
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 50
பஞ்சாப் தேசிய வங்கி 70
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி 30
யுசிஓ வங்கி 22
யூனியன் வங்கி 12
மொத்தம் 1,161
இப்பணியிடங்களுக்கு 20 முதல் 28 வயது உடைய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்தந்த மாநிலத்திற்கான உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டும். அதன்படி, தேசிய அளவில் லட்சக்கணக்கில் இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு தேர்வாகும் நபர்களுக்கு ரு.24,050 முதல் ரூ.64,480 வரை என்ற அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு இரண்டு கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகள் கொள்குறி வகையில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு ஆங்கிலம், நுண்ணறிவு, பகுத்தறிவு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 100 கேள்வி கொண்டு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் கட்-ஆஃப் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள். முதன்மைத் தேர்வு பொது விழிப்புணர்வு, ஆங்கிலம், நுண்ணறிவு, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் 155 கேள்விகள் கொண்டு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தமிழ் மொழியில் தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதில் முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, மொழி திறன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
IBPS கிளார்க் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, அதில் தேர்வானவர்களுக்கு நவம்பர் 29-ம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டது. தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















