கீரை முதல் மீன்கள் வரை: மெட்ராஸ் ஐ வராமல் இருக்க இதையெல்லாம் சாப்பிடுங்க; கண்ணுக்கு நல்லது!
நிலவும் வானிலை நிலைமைகள் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்தை எளிதாக்குகின்றன. இதுவே கண் தொடர்பான நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
பொதுவாக கன்ஜக்டிவிடிஸ் என்று அழைக்கப்படும் இந்த உடல் உபாதைகளுக்கு பரவலாக 'மெட்ராஸ் ஐ' என்ற பெயரும் உண்டு. கோடை விடுமுறைக்கு தென்னிந்தியாவுக்கு, குறிப்பாக சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகள் நம் ஊரின் வெப்பத்திற்கு பழக்கப்பட்டவர்கள் இல்லை. முன்பெல்லாம் அவர்கள் இங்கு வரும்போது அந்த அதிக வெப்பம் காரணமாக கண் எரிச்சல் மற்றும் கண் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதனால் இந்த பிரச்சனைக்கு அப்போது சென்னைக்கு இருந்த பெயரான மெட்ராஸ் என்பதையே வைத்துள்ளனர்.
ஆனால், பலர் நினைப்பது போல் இது சென்னையில் மட்டுமோ அல்லது இந்தியாவில் மட்டுமோ பரவும் நோயல்ல. உலகெங்கிலும் எல்லோருக்கும் இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது. நிலவும் வானிலை நிலைமைகள் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்தை எளிதாக்குகின்றன. இதுவே கண் தொடர்பான நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் பெரும்பாலும், சோர்வு, கண் எரிச்சல், கன் கூசுதல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்த வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். சில உணவுப் பொருட்கள் இதனைத் தடுக்க உதவுவது மட்டுமல்லாமல், குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தவும் உதவுகின்றன.
கீரைகள்
கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம் ஆகும். அவை லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகிய வற்றைக் கொண்டுள்ளன. அவை கண்களை இதுபோன்ற நோயில் இருந்து பாதுகாக்கின்றன.
ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள்
கேரட், சக்கரவள்ளிக்கிழங்கு, ஆப்ரிகாட், பப்பாளி மற்றும் பூசணிக்காய் போன்ற ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. இது சாதாரண கண் செயல்பாட்டை பராமரிக்க தேவையான வைட்டமின் ஏ-வை அதிக அளவில் கொண்டுள்ளன.
சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள்
சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள் தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உடலுக்கு வழங்குகின்றன. இந்த விதைகளை காலை உணவு தானியங்கள், தயிர் அல்லது சாலட்களில் சேர்த்துக்கொள்ளலாம்.
கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. உணவில் அவற்றைச் சேர்ப்பது உடலுக்கு ஒமேகா -3 அளவை அதிகரிக்கும். அவற்றை க்ரில்லிங், பேக்கிங் செய்தோ வேக வைத்தோ சாப்பிடுவது நல்லது.
முளைக்கட்டிய கோதுமை மற்றும் காய்கறி எண்ணெய்கள்
முளைக்கட்டிய கோதுமை மற்றும் தாவர எண்ணெய்களில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்தாகும். இது கண் மட்டும் அல்ல ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் இருக்க உதவும்.
இந்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது, கண் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நோய்த்தொற்றுகளின் தாக்கத்தை குறைக்கவும், அப்படி பாதிக்கப்பட்டுவிட்டால் விரைவாக அதிலிருந்து மீளவும் இவை உதவுகின்றன.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )