Dengue | காய்ச்சல்தானேன்னு அலட்சியமா இருக்காதீங்க, உஷார்.. டெங்கு குறித்து அறியவேண்டியவை இதோ
கொரோனாவின் அச்சுறுத்தல்கள் இன்னும் நிறைவடையாத நிலையில் டெங்கு பரவல் பல நாடுகளை புரட்டிப்போட துவங்கியுள்ளது. டெங்கு குறித்த சில முக்கிய விஷயங்கள் இந்த தொகுப்பில்..
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவி வருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் இந்த டெங்கு வைரஸ் பரவுகிறது. டெங்கு வைரஸ் தொற்று சிலருக்கு அறிகுறிகள் இல்லாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் சிலர் கடுமையான காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் டெங்கு தொற்றுநோய்களின் போது கடுமையான பாதிப்புகள் முதலில் கண்டறியப்பட்டது. இன்று பெரும்பாலான ஆசிய மற்றும் லத்தீன், அமெரிக்க நாடுகளிலும் டெங்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆய்வின்படி ஒரு வருடத்திற்கு 390 மில்லியன் மக்கள் டெங்கு வைரசால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 96 மில்லியன் (67-136 மில்லியனாகவும் இருக்கலாம்) மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு பரவல் குறித்த மற்றொரு ஆய்வில் 3.9 பில்லியன் மக்கள் டெங்கு வைரஸ்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
COVID-19 தொற்றுநோய் உலகளாவில் பல்வேறு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த முக்கியமான காலகட்டத்தில் டெங்கு உள்ளிட்ட பிற வைரஸ் பரவல் தீவிரத்தை அதிகரிக்கிறது. எனவே தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து , வைரஸ் பரவலை தடுப்பதற்கும், கண்டறிந்து கிச்சையளிப்பதன் முக்கியத்துவத்தை WHO வலியுறுத்தியுள்ளது. டெங்கு பொதுவாக கொசு மூலமே பரவுகிறது. ”ஏடிஸ் அல்போபிக்டஸ்" வகை கொசுக்கள் மட்டுமே டெங்கு காய்ச்சலை பரப்புவதற்கு முக்கியமான காரணம். இந்த வகையான கொசு கழிவுநீரில் உருவாவதில்லை. மாறாக சுத்தமான நீரிலிருந்து மட்டுமே இவை உருவாகின்றன. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடிக்கும் கொசு, மற்றொருவரை கடிப்பதால் அவருக்கும் டெங்கு பரவுகிறது. குறிப்பாக டெங்கு கொசு பகலில் தான் மனிதர்களை கடிக்கும் என்பதால் கொசுக்கள் கடிக்காதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அது பிறக்கும் குழந்தைக்கும் வர வாய்ப்பு உள்ளது.
டெங்கு கடுமையான காய்ச்சல் போன்ற நோயாகும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கிறது, மேலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் உயிரிழப்புகளை கூட ஏற்படுத்துகிறது. டெங்கு அறிகுறிகள் பொதுவாக 2-7 நாட்கள் நீடிக்கும், 4-10 நாட்களுக்கு பிறகு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். நோய் தொற்று உருவாகிய 3-7 நாட்களுக்கு பிறகு நோயாளிக்கு காய்ச்சல் குறைந்து கடுமையான டெங்குவோடு தொடர்புடைய எச்சரிக்கை அறிகுறிகள் வெளிப்படும். பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது, சுவாசக் கோளாறு, கடுமையான இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கவனிக்கவேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் :
- கடுமையான வயிற்று வலி
- தொடர்ச்சியான வாந்தி
- மூச்சு திணறல்
- ஈறுகளில் இரத்தப்போக்கு
- சோர்வு
- வாந்தியில் இரத்தம்.
கடந்த 2015ம் ஆண்டு சனோஃபி எனும் மருந்து நிறுவனத்தின் தடுப்பூசி பிரிவான "சனோஃபிபாஸ்டியர்", டெங்கு நோய்க்கு தீர்வு கண்டுள்ளது. இந்நிறுவனம் "டெங்வேக்ஸியா" எனும் தடுப்பூசியை கண்டுபிடித்து, அதனை முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. 9 முதல் 45 வயது வரையுள்ள அனைத்து வயதுடையோரை தாக்கும் 4 வகையான டெங்கு நோய்களுக்கும் இந்த தடுப்பூசி மூலம் தீர்வு காணலாம் என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியைக் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு இனி தெரியவரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )