Delta Plus Variant | டெல்டா ப்ளஸ் வகை கொரோனா குறித்த பொதுவான கேள்விகளும், அதற்கான பதில்களும்..!
டெல்டா ப்ளஸ் குறித்து பொதுவாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அந்த கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.
இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா ப்ளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்த நிலையில், புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள டெல்டா ப்ளஸ் வகை கொரோனா, மூன்றாவது அலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே டெல்டா ப்ளஸ் குறித்து சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. அந்த கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.
1. டெல்டா ப்ளஸ் கொரோனா மூன்றாவது அலையை உருவாக்குமா?
இப்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவருகிறது. இந்த நேரத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா இந்தியாவின் பல பகுதிகளிலும் தென்படத் தொடங்கியுள்ளது.இது அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் கவலை அளிக்கும் விஷயமாகவே உள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மாநில எல்லைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மூன்றாம் அலைக்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. மூன்றாவது அலையை சமாளிக்க பல மாநிலங்கள் முன்னெடுப்பையும் தொடங்கியுள்ளன.
2.டெல்டா ப்ளஸ் கொரோனா என்றால் என்ன? எங்கே கண்டுபிடிக்கப்பட்டது?
டெல்டா ப்ளஸ் கொரோனா AY.1 என்று அழைக்கப்படுகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை டெல்டா வகை என பிரிக்கப்பட்டது. அதன் அடுத்த மாறுபாடாக டெல்டா ப்ளஸ் உள்ளது. மருத்துவத்துறையில் B.1.617.2.1 அல்லது AY.1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு ஐரோப்பாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது, ஆனால் இது ஜூன் 13 அன்று பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
3.டெல்டா ப்ளஸ் கொரோனா ஏன் ஆபத்தானது?
டெல்டா ப்ளஸ் கொரோனாவை கவலைத்தரக்கூடிய ஒன்றாகவே அரசு பார்க்கிறது. வேகமாக பரவக்கூடிய தொற்றாக கணிக்கப்பட்டுள்ள டெல்டா ப்ளஸ் நுரையீரலில் வேகமாக பரவி நோயதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான்,போலந்து, நேபாள், சீனா மற்றும் ரஷ்யாவில் டெல்டா ப்ளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
4. டெல்டா ப்ளஸ் கொரோனா பரவக்கூடியதா?
நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பிறகுதான் பரவும் விதம் குறித்து சரியாக கணிக்க முடியும். ஆனாலும் இந்தியாவில் பல இடங்களிலும் டெல்டா ப்ளஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி எந்த அளவுக்கு டெல்டா ப்ளஸூக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்ற ஆய்வும் செல்கிறது. இது குறித்து பேசிய நாட்டின் முன்னணி வைராலஜிஸ்டுகளில் ஒருவருமான பேராசிரியர் ஷாஹித் ஜமீலின், டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்றார்.
5.டெல்டா ப்ளஸ் கொரோனாவை எதிர்த்து மோனோகுளோனல் ஆண்டிபாடி வேலை செய்யும்?
தற்போது மிதமான கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு மோனோகுளோனல் ஆண்டிபாடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது வைரஸ் உள்ளே நுழைவதை தடுக்கும் கிகிச்சை முறை. ஆனால் டெல்டா ப்ளஸ் கொரொனாவை பொருத்தவரை மோனோகுளோனல் ஆண்டிபாடி சிகிச்சையில் கட்டுப்படாது என்று கூறப்படுகிறது. மோனோகுளோனல் ஆண்டிபாடி சிகிச்சையை எதிர்த்து நிற்கும் சக்தி கொண்டது டெல்டா ப்ளஸ் என்பதே அறிவியல் ஆய்வாளர்களின் கருத்து.
6.டெல்டா ப்ளஸ் கொரோனாவை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?
டெல்டா ப்ளஸ் கொரோனா இந்தியாவில் 40 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்டா ப்ளஸ் காணப்பட்ட மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துதல், உடனடி கொரோனா பரிசோதனை, மக்கள் கூட்டத்தை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )