![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Delta Plus | டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு மதுரையில் முதல் உயிரிழப்பு
நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேரும், அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 9 பேரும், கேரளாவில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
![Delta Plus | டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு மதுரையில் முதல் உயிரிழப்பு Corona Delta Plus Variant Tamil Nadu reports first death due Covid variant Delta Plus | டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு மதுரையில் முதல் உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/26/80c7bb42e0f138dfb91598ff9949160b_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரையில் டெல்டா பிளஸ் நோய்த் தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம், டெல்டா பிளஸ் பாதிப்புக்கு முதல் உயிரிழப்பை தமிழ்நாடு பதிவு செய்தது. ‘டெல்டா பிளஸ்’ மாறுபட்ட கொரோனாவை, கவலையளிக்கக் கூடியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வகைப்படுத்தியிருந்தது.
முன்னதாக, மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு முன்னதாக தெரிவித்தது. இதனையடுத்து, அடுத்தடுத்த நாட்களில் நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேரும், அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 9 பேரும், கேரளாவில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தமிழ்நாட்டில் கொரோனா பிளஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வேரியண்ட் என்றால் என்ன?
முன்னதாக, டெல்டா பிளஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என தெரிவித்தார். மேலும்," இந்த வைரசை தற்போதுள்ள ஆய்வகங்களில் கண்டறிய இயலாது. இந்த வைரசை கண்டறிவற்கு பிரத்யேக ஆய்வகங்கள் உள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்களிலே இந்த புதிய வகை டெல்டா பிளஸ் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக B.1.617.2 டெல்டா கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. டெல்டா உருமாறிய கொரோனா வைரஸ் மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் 'டெல்டா பிளஸ் வகை வைரஸ் உருவானது. ஆனால், இது இந்தியாவுக்கு வெளியே தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஸ்பைக் புரதத்தில் K417N என்ற மாறுபாட்டை டெல்டா பிளஸ் கொண்டுள்ளது. இதன் காரணமாக, அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் வலுவாக ஒட்டக் கூடிய தன்மை மற்றும் பிற பொருள் எதிரிகளின் எதிர்வினையை குறைக்கும் தன்மையை இந்த கொரோனா வைரஸ் வகை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Delta Plus Variant | டெல்டா ப்ளஸ் வகை கொரோனா குறித்த பொதுவான கேள்விகளும், அதற்கான பதில்களும்..!
இதற்கிடையே, இந்தியாவின் கொரோனா மூன்றாவது அலை உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதன் தாக்கம் முந்தைய இரண்டு அலைகளை விட குறைவானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஐசிஎம்ஆர் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், "Plausibility of a third wave of COVID-19 in India: A mathematical modelling based analysis" என்ற ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
உருமாற்றம் பெற்ற கொரோனா வகைகள், சார்ஸ் - கோவ்- 19 வைரஸில் இருந்து முற்றிலும் மாறுபடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் பெருந்தொற்றை கண்டுக்குள் கொண்டு வரமுடியும். டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, பீட்டா, காமா போன்ற மாறுபட்ட கொரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும் அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்துகொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறித்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)