Angry Rantman: 27 வயது பிரபல சினிமா விமர்சகர் ஆங்ரி ரேண்ட்மேன் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Youtuber Abhradeep Saha: நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி ஆங்ரி ரேண்ட்மேன் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் கோபமாக கத்தியபடி சினிமா விமர்சனங்களை முன்வைத்து தனித்துவமான பாணியில் கவனமீர்த்த யூடியூபர் ஆங்ரி ரேண்ட்மேன் (Angry Rantman) காலமானார். அவருக்கு வயது 27.
அப்ரதீப் சாஹா எனப்படும் ஆங்ரி ரேண்ட்மேன் தன் கேஜிஎஃப், விக்ரம், பேட்ட உள்ளிட்ட திரைப்பட விமர்சனங்களின் மூலம் இணையத்தில் பிரபலமானவர். கடந்த 2017ஆம் ஆண்டு யூடியூப் சேனல் தொடங்கி அப்ரதீப், குறிப்பாக தன்னுடைய கேஜிஎஃப் திரைப்பட விமர்சனத்தின் மூலம் தான் இணையத்தில் பேசுபொருளானார்.
முதலில், விளையாட்டு, ஃபுட்பால் விமர்சன கண்டெட்டுகள் மூலம் இணையத்தில் கவனமீர்த்த இவர், தொடர்ந்து சினிமா விமர்சனம் செய்யத் தொடங்கினார். வழக்கமான சினிமா விமர்சன பாணியில் இருந்து மாறுபட்டு, கத்தி கத்தி கோபமாக விமர்சனங்கள் அளிக்கும் தனித்துவ பாணியின் மூலம் இவர் சமூக வலைதளங்கள், குறிப்பாக மீம்களின் மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்றார்.
இறுதியாக மாதவன், ஜோதிகா நடித்த ஷைத்தான் படத்துக்கு இவர் விமர்சனம் செய்திருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்னர் இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி ஆங்ரி ரேண்ட்மேன் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் விமர்சனம் அளித்து ரசிகர்களைப் பெற்ற ஆங்ரி ரேண்ட்மேனின் இழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.