Elon Musk: புண்ணியமா போகும்! எலான் மஸ்குக்கு இன்ஸ்டாவில் தூதுவிட்ட இளம் கோலிவுட் இயக்குநர்!
நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி சினிமா ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் துருவங்கள் பதினாறு. அறிமுக இயக்குநராக கார்த்திக் நரேன் அப்படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே யார் இந்த இளைஞர் என்று தமிழ் சினிமாவை கவனிக்க வைத்தார். அதன்பின்னர் அவரது இயக்கத்தில் வெளியான மாஃபியாவும் கவனிக்க வைத்தது. இதற்கிடையே நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
அரவிந்தசாமி, இந்திரஜித், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் படம் மட்டும் வெளியாகவில்லை. படத்தை தயாரித்த கவுதம் மேனனுக்கும், இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையே படம் வெளியாகாமல் கிடப்பில் போடக்காரணம் எனக் கூறப்பட்டது.
View this post on Instagram
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எலான் மஸ்குக்கு விளையாட்டாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் கார்த்திக். அதில், ''நிலவுக்கு போகும் முன்பு நரகாசூரன் படத்தை வாங்கிக்கொள்ளுங்கள். புண்ணியமாக போகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான திரைப்படம் மாறன், கொடூர ரிவியூ வாங்கி ரசிகர்களிடையே நெகட்டிவாக விமர்சனம் செய்யப்பட்டது. நடிகர் தனுஷுக்கு பெரிய அடியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேற்று ட்விட்டரை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்ச்சித்து வந்தார் எலான் மஸ்க். ட்விட்டருக்கும் சரியான ஒரு தலைமை இல்லாததால், நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போனது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டருக்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது.
இந்நிலையில்தான் ட்விட்டரை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் போட்டிப் போட்டுகொண்டு வந்தன. ஆனால், இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்நிலையில்தான் தன்னுடைய படத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டுமென காமெடியாக ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார் கார்த்திக் நரேன்.