Actor Lokesh: அதிர்ச்சி.. கை, கால்கள் துண்டாகி விபத்தில் இளம் நடிகர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்
பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கன்னட நடிகர் லோகேஷ் பலியான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கன்னட நடிகர் லோகேஷ் பலியான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
118 கி.மீ., கொண்ட பெங்களூரு - மைசூரு விரைவு நெடுஞ்சாலை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மொத்தம் 300க்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த விரைவுச்சாலையில் நடந்ததுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா ஆய்வு செய்து ரூ.158.81 கோடியில் கூடுதல் பணிகளை மேற்கொள்ள உத்தவிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் விரைவுச்சாலையில் விபத்து ஏற்பட்டு கன்னட இளம் நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டலுபேட்டை தாலுகா உள்ளது. இங்குள்ள தொடுப்பூரை பகுதியில் லோகேஷ் என்ற இளம் நடிகர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் குறும்படங்களில் நடித்த நிலையில் சில கன்னட திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் தான் புதிய பைக் ஒன்றை வாங்கியிருந்தார்.
இதனிடையே வெள்ளிக்கிழமை மாலையில் ரீல்ஸ் வீடியோவை எடுத்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்ட அவர், சனிக்கிழமை (ஜூலை 29) அதிகாலை 2.30 மணியளவில் தனது சொந்த ஊரான தொடுப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 5 மணியளவில் மாண்டியா மாவட்டம் எலியூர் அருகே அவரது பைக் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. அந்த பக்கம் சென்றவர்கள் பைக் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் கை, கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மண்டியா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது விபத்தில் உயிரிழந்தது இளம் நடிகர் லோகேஷ் என்பதும், சொந்த ஊருக்கு சென்ற போது இந்த விபத்து நடந்ததும் தெரியவந்தது. அதேசமயம் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கார் மோதியதா அல்லது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
விபத்து நடந்த இடத்தில் ஒரு காரின் வாகன பதிவெண் கிடைத்துள்ளதாக, அதை வைத்து விபத்து நடந்துள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.