Mahaan | இந்தப்படமும் ஓடிடி யா? புலம்பும் விக்ரம் ரசிகர்கள்.. மகான் பட ரிலீஸும், குழப்பமும்!
மகான் படத்தை மிகுந்த நம்பிக்கையுடன் உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதன் முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் மகான் . இந்த திரைப்படத்தில் விகரம் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வருகிறது. படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் துருவ் சீனாவின் தற்காப்பு கலைகள் அறிந்த காவல்துறை அதிகாரியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடிடியிலேயே படம் நல்ல விலைக்கு கேட்பதாக கூறி தயாரிப்பு தரப்பு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மகான் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்காக காத்திருக்கும் விக்ரம் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும் , நிச்சயம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியிடுவதால் ஒரு பாடலை நீக்கிவிட்டு வெளியிட்டார் இயக்குநர். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. குறிப்பாக பாடல் நீக்கப்பட்ட பகுதி ரசிகர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவிட்டது. இந்நிலையில் மகான் படத்தை மிகுந்த நம்பிக்கையுடன் உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் , இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் இணைந்து பாபி சிம்ஹா, சிம்ரன், வானி போஜன் என பெரிய பட்டாளமே இணைந்துள்ளது. ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான சிங்கிள் டிராக் பாடலும் பலரின் கவனத்தை பெற்றது.
“சூறையாட வாடா சுத்தி அள்ளி தந்துடு சூரா” என தொடங்கும் அந்த பாடலில் தோன்றும் விக்ரம் , பார்க்கும் ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த தவரவில்லை. கிராமிய கலைஞர்களை வைத்து, மிரட்டலாக பாடலை உருவாக்கியுள்ளார் இயக்குநர். பாடலில் கலைஞர்களுடன் இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மெய் மறந்து ஆடும் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன. இந்த பாடலை வி.எம். மகாலி்ங்கமுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் ஹிட் வரிசையில் நிச்சயம் சூறையாட வாடா படல் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.விக்ரமின் 60 வது படமாக உருவாகி வரும் மகான் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் வருகிற பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் காத்திருக்காம்.. இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது நினைவுகூறத்தக்கது.