Mahendran: திரைமொழியின் உச்சம்.... இயக்குநர் மகேந்திரன் வருகையும்.. தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கமும்!
ஒரு பெண் தனது இரு குழந்தைகளை அணைத்தபடி விடியும் சூரியனை எதிர்பார்த்து காத்திருப்பது தான் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் டைட்டிலில் வரும் காட்சி. இந்தப் படத்தின் அடிநாதமும் அதுவே.
துருக்கிய இயக்குநரான நூரி பில்ஜ் சீலன் இயக்கிய விண்டர் ஸ்லீப் (Winter Sleep) படத்தை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். அப்படி நீங்கள் அந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது அந்தப் படத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்று, மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படத்தின் சுந்தரவடிவேலு கதாபாத்திரத்தை நினைவூட்டலாம்!
இதைக் குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம் எந்த ஒரு மொழியில் வந்த நல்ல ஒரு படத்துக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கு கொடுக்கும் அளவுக்கு, அது நேர்த்தியான ஒரு படைப்பு என்று உணர்த்துவதற்காக மட்டுமே!
சினிமா மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் உதிரிப்பூக்கள் படம் யாரோ ஒருவரால் பரிந்துரைக்கப்படுகிறது. எப்படி ஒரு சிறந்த படம் எடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல ஒரு கதைகளத்தை நேர்மையாக சொல்ல முயற்சித்தால் அது எப்படி ஒரு சிறந்த படமாக இருக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக!
மகேந்திரனின் வருகை
முதலில் கதை மற்றும் வசனங்கள் எழுதி வந்த மகேந்திரன் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமாகும் காலத்தில், இயக்குநர் பாலச்சந்தர் அவரது திரைவாழ்வின் உச்சத்தில் இருந்தார். மறுபுறம் கிராமியக் கதைகளை சொல்வதில் மகுடம் சூடிக்கொண்டிருந்தார் இயக்குநர் பாரதிராஜா. இந்த மாதிரியான ஒரு கட்டத்தில் மகேந்திரன் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்கினார்.
உதிரிப்பூக்கள்
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ என்கிற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் உதிரிப்பூக்கள். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மிக அதிகமான செல்வாக்கு பெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேலு. தனது ஊரில் ஒரு பள்ளியை நிர்வகித்து வருகிறார். தனது கெளரவத்துக்காக மட்டுமே தவிர பொருளாதார நெருக்கடி எல்லாம் அவருக்கு எதுவும் இல்லை.
தனது மனைவி லக்ஷ்மி உடல் நிலை சரியில்லாத ஒருவராக இருப்பதால் தனது மனைவிமீது வெறுப்பை சுமந்தவாறே இருக்கிறார் சுந்தரவடிவேலு. ஊருக்குள் தன்னைத் தவிர யாரும் மகிழ்ச்சியாகவோ தன்னைவிட யாரும் உயர்ந்தோ இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்.
அதேபோல் தான் ஆசைப்பட்டத்தை அடைந்தே தீரும் விடாப்பிடியான ஒரு குணம் கொண்டவர். தனது மனைவியின் தங்கையை எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசைப்படும் சுந்தரவடிவேலு எந்த எல்லைவரை போகிறார்? எத்தனையோ ஆண்டுகளாக அவரது இந்த குணத்தை சகித்து வரும் அந்த ஊர்மக்கள் கடைசியாக என்ன முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது படத்தின் கதைச்சுருக்கம்.
மகேந்திரனின் திரைமொழி
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் திரைமொழி பல இடங்களில் இன்றுவரை புதுமையானதாக இருக்கிறது, முக்கியமாக கதையைச் சொல்வதற்காக இந்தப் படத்தில் இயற்கையை மகேந்திரன் பயன்படுத்தியிருக்கும் விதம் நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஊரில் உள்ள அத்தனை மனிதர்களையும் உயிர்ப்புடன் கதைக்குள் நடமாடவிடுகிறார்.
படம் முழுக்க இந்த மனிதர்களை நாம் பார்த்துவருகிறோம் அவர்களின் குணங்களைப் பார்க்கிறோம், படத்தின் இறுதிக்காட்சியில் அவர்களின் கோபம் நமக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. பல இடங்களில் எந்த வித ஒலியும் இல்லாமல் காட்சியை மெளனமாக மகேந்திரன் விடுவதன் மூலம் ஒரு படைப்பை பார்வையாளர்கள் நிரப்பிக்கொள்ளும் இடத்தை அனுமதித்திருக்கிறார்.
எல்லா காலத்திற்குமான வில்லன்
அதுவரை ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றால் அது கொடூரமான செயல்களைச் செய்யும் ஒரு மனிதனாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் மிக அமைதியான குரலில் பேசும் , மிக விஷமமான ஒரு மனநிலையைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை உதிரிப்பூக்கள் படத்தில் உருவாக்கினார் மகேந்திரன்.
இன்னும் சொல்லப்போனால் அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை எதார்த்தத்தில் நாம் அனைவரும் பார்த்திருந்தும், ஒரு முறைகூட திரையில் பார்க்காமல் தான் இருந்து வந்திருக்கிறோம்.
இயக்குநர் கரு.பழநியப்பன் உதிரிப்பூக்கள் பற்றி சொன்னது: “தமிழ் சினிமாவில் வில்லன்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று உதிரிப்பூக்களின் வருகைக்குப் முன் இரண்டாவது அதற்கு பின். அஜித் நடித்த ஆசை படத்தின் பிரகாஷ் ராஜ், பரத் நடித்த எம் மகன் படத்தி நாசர் என இந்த கதாபாத்திரங்களும் ஏதோ வகையில் இந்தப் படத்திடன் தொர்புடையவை.
மகேந்திரனின் பெண்கள்
சினிமாவில் பெண்களை போகப்பொருளாக மட்டுமே சித்தரிப்பதில் கடும் விமர்சனங்களைக் கொண்டவர் மகேந்திரன். தனது படங்களில் எதார்த்தத்தில் பெண்களில் நிலையை காட்ட வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்தியச் சமூகத்திற்குள் இருக்கும் பெண்கள் எத்தனையோ கொடுமைகளை சகித்துக்கொண்டு சமூக கட்டமைப்புக்குள் இருந்து வெளியேற முடியாமல் தத்தளித்து நிற்கிறார்கள் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு பெண் தனது இரு குழந்தைகளை அணைத்தபடி விடியும் சூரியனை எதிர்பார்த்து காத்திருப்பது தான் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் டைட்டிலில் வரும் காட்சி. இந்தப் படத்தின் அடிநாதமும் அதுவே.
தனது கணவன் தன்னை எவ்வளவோ உதாசீனம் செய்தும் அவனை அவள் சகித்துக் கொண்டு இருப்பது தனது குழந்தைகளுக்காக மட்டுமே. அவள் வாழ்க்கையில் இருக்கும் வெளிச்சமான தருணங்கள் தனது குழந்தைகளுடன் அவள் இருக்கும் தருணங்கள் மட்டும் தான். இன்றைய சூழலில் பாதி என்றால் அன்றைய சூழலில் கிட்டதட்ட அனைத்துப் பெண்களின் நிலையும் அதுவாகத்தான் இருந்தது.
உதிரிப்பூக்கள் குறித்து மணிரத்னம்
உதிரிப்பூக்கள் படத்தைப் பற்றி இயக்குநர் மணிரத்னம் இப்படி கூறியிருக்கிறார் “மகேந்திரன் தனது உதிரிப்பூக்கள் படத்தில் ஒரு ஒரு இடத்தை தொட்டிருப்பது போல், ஒரு முழுமையான கதையை என் வாழ்நாளில் ஒருமுறை நான் சொல்லிவிட்டால் நான் காலத்துக்கும் மகிழ்ச்சியாக இருப்பேன்” இயக்குநர் மகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!