Karunas : அந்த படத்துக்கு எனக்கு ஜோடியா சிம்ரனை ஃபிக்ஸ் பண்ணாங்க.. அய்யோ வேண்டாம்னேன் - கருணாஸ்
திண்டுக்கல் சாரதி படத்தில் எனக்கு ஜோடியாக சிம்ரனை இறக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் நான்தான் கூடவே கூடாது என்றேன்.
திண்டுக்கல் சாரதி படத்தில் எனக்கு ஜோடியாக சிம்ரனை இறக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் நான்தான் கூடவே கூடாது என்றேன். சிம்ரனை மட்டும் நடிக்கவைத்திருந்தால் அந்தப் படம் ஓடியிருக்காது என்று நடிகர் கருணாஸ் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் சாரதி படத்தில் நடிகை கார்த்திகா கருணாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பார். திருத்தமான, குடும்பப்பாங்கான அழகு கொண்ட அவர் அந்த கதாபாத்திரத்தில் வெகுவாகப் பொருந்தியிருப்பார்.
பிளாட்ஃபார்ம் டூ எம்எல்ஏ..
கருணாஸ் கடந்துவந்த பாதை மிகவும் சவாலானது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை எனும் கிராமத்தில் பிறந்தவர் கருணாஸ். 2001 ஆம் நந்தா படத்தில் லொடுக்குப் பாண்டி என்ற கதாபாத்திரம் மூலம் கருணாஸ் தமிழ்த் திரையில் அறிமுகமானார். அந்த கதாபாத்திரம் அவருக்கு பெரும் அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துவிட்டார். ராஜாதி ராஜா, அம்பாசமுத்திரத்தில் அம்பானி, காசேதான் கடவுளடா படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். அதுதவிர சில பாடல்களையும் பாடியுள்ளார். திரையில் மட்டுமல்லாமல் ஓட்டல் துறையிலும் கருணாஸ் தடம் பதித்தார். மனைவி கிரேஸுடன் இணைந்து லொடுக்கு பாண்டி
ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் ஓட்டல் நடத்தினார். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இவர் முக்குலத்தோர் புலிப்படை என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். தான் எம்.எல்.ஏ. ஆன பின்னர் அவர் அளித்தப் பேட்டியில் சென்னை சேத்துப்பட்டில் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் வளாக நடைமேடையில் நான் படுத்துறங்கிய காலமும் உண்டு. சினிமா என்னை சட்டசபை வரை கூட்டி வந்துள்ளது என கண்கலங்கிப் பேசியிருந்தார்.
இதை அவர் பல மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். இந்நிலையில், திண்டுக்கல் சாரதி படம் பற்றி அவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
சிம்ரனை ஏன் நிராகரித்தேன்...
திண்டுக்கல் சாரதி படத்தில் எனக்கு ஜோடியாக சிம்ரனை இறக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் நான் தான் கூடவே கூடாது என்றேன். சிம்ரனை மட்டும் நடிக்கவைத்திருந்தால் அந்தப் படம் ஓடியிருக்காது . கதைப்படி ஒரு சுமாரான மனிதர் தனக்குக் கிடைத்த அழகான மனைவியால் சந்தேகம் கொள்வதும், தாழ்வு மனப்பான்மையால் தவிப்பதுமே கதை.
நான் உண்மையில் சுமாரானவன்தான் எனக்கு கொஞ்சம் அழகான ஹீரோயின் கொடுத்தாலே கதைக்குப் போதுமானது. எனக்கு ஜோடியாக சிம்ரனைக் கொடுத்தால், அவ்வளவுதான் மக்கள் கொதித்துவிடுவார்கள் என்றேன். என் கணிப்பு சரியாக இருந்தது. திண்டுக்கல் சாரதி செம்ம ஹிட் அடித்தது என்று பேசியுள்ளார் நடிகர் கருணாஸ்.