Oh My Dog: “சிவக்குமார் அவ்வளவு ஒழுக்கமானவர்; அவர் விதைத்த விதைதான் சூர்யா” - நடிகர் விஜயகுமார்
சிவக்குமார் வீட்டுக்குப் போனால் யாருக்கும் டீ, காபி கிடைக்காது மாறாக எல்லோருக்கும் லெமன் ஜூஸ் கொடுப்பார். உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதும் அவர் அவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்று நடிகர் விஜயகுமார் கூறியுள்ளார்.
சிவக்குமார் வீட்டுக்குப் போனால் யாருக்கும் டீ, காபி கிடைக்காது மாறாக எல்லோருக்கும் லெமன் ஜூஸ் கொடுப்பார். உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதும் அவர் அவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்று நடிகர் விஜயகுமார் கூறியுள்ளார்.
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' (Oh My Dog) திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இந்நிலையில் 'ஓ மை டாக்' ( Oh My Dog ) படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பில் நடிகர் சிவக்குமார், நடிகர் விஜயகுமார், அருண் விஜய், அறிமுக குழந்தை நட்சத்திரமான ஆர்ணவ் விஜய் (அருண் விஜய்யின் மகன்) மற்றும் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர். ரமேஷ் பாபு, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விஜகுமார் பேசியதாவது..
“சிவகுமாரும் நானும் 1964 முதல் நண்பர்கள். 55 ஆண்டுகாலமாக நண்பர்களாக இருக்கிறோம். சினிமாவுக்கு நல்ல முன்னுதாரணமான குடும்பம் சிவக்குமாரின் குடும்பம். அவர் காபி, டீ கூட அருந்துவதில்லை. அந்தக் காலத்தில் அவருடைய வீட்டிற்கு யார் சென்றாலும் டீ, காபி கிடைக்காது. ஒரு பானை நிறைய எலுமிச்சை பழ ஜூஸ் போட்டு வைத்திருப்பார்கள். வீட்டிற்கு யார் வந்தாலும் விருந்தினர்களுக்கு ஜூஸ் தான் தருவார். அவ்வளவு ஒழுக்கத்தை பின்பற்றுவார். அந்த ஒழுக்கம் தான் அவருடைய பிள்ளைகளை நல்ல நிலையில் வைத்திருக்கிறது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறது. இந்த தரத்திற்குக் காரணம் சிவக்குமார். அவர் விதைத்த விதைதான் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 நாட்கள் ஊட்டியில் நடந்தது. அப்போது தொடக்க விழாவில் பேசிய அண்ணன், இதுபோன்ற அரிய வாய்ப்பு யாருக்குமே கிடைக்காது என்று கூறினார். அப்போது நான் குழந்தைகள் படத்தில் நடிப்பது சரியாக இருக்குமா என்று சந்தேகம் எழுப்பினேன். ஆனால் அந்தக் கதாபாத்திரம் எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை தந்தது. ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தினைச் சேர்ந்த கண்டிப்பான தாத்தாவாக நடித்துள்ளேன். ‘தாத்தா மகன் பேரன் என்ற மூன்று தலைமுறையினரும் இணைந்து நடித்து இதற்கு முன் தெலுங்கில் ஒரு படம் வெளியானது. அதன் பிறகு தமிழில் இந்தப் படம்தான் தயாராகிறது’ என சிவகுமார் குறிப்பிட்டார். உண்மையிலேயே இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் எனது பேரன் ஆர்ணவ் விஜய் யாரோ சிலரிடம், ‘இந்தப்படத்தில் நான்தான் மெயின். என்னுடைய அப்பாவும், தாத்தாவும் சைடு தான்’ என சொல்லிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அதாவது சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதுதான் சைடு என சொல்லி இருக்கிறார். அவர் நன்றாக படித்து, பதவிகள் கிடைத்த பிறகு, கலைத்துறையில் நிரந்தரமாக ஓரிடத்தை பிடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். தனது கடின உழைப்பால் தமிழ்த் திரையில் அருண் விஜய் தனியிடம் பிடித்துள்ளார். அவரும் மென்மேலும் முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.