Pannaiyarum Padminiyum: எங்க ஊரு வண்டி.. 10 ஆண்டுகளை நிறைவு செய்த பண்ணையாரும் பத்மினியும்!
பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளன.
பண்ணையாரும் பத்மினியும்
விஜய் சேதுபதி நடித்து சு.அருண்குமார் இயக்குநராக அறிமுகமான பண்ணையாரும் பத்மினியும் படம் கடந்த 2014 ஆண்டு வெளியானது. ஜெயபிரகாஷ், துலசி, நீலிமா ராணி, ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படமாக வெளியான பண்ணையாரும் பத்மினியும் படம் பின் முழுநீள படமாக வெளியானது. இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது இப்படம்.
கதை
படத்தின் டைட்டிலைப் போல் ஒரு நிலவுடமையாளருக்கும் ஒரு காருக்கும் இடையிலான உறவை பிரதான கதையாக வைத்து உருவாகியப் படம் பண்ணையாரும் பத்மினியும். பழைய ரக ஃபியட் கார்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இன்றுவரை இருந்து வருகிறது. அப்படியான ஒரு காரை நினைவுகளைத் தூண்டும் கருவியாக வைத்து இப்படம் அமைந்திருக்கிறது.
ஒரு ஊரில் இருக்கும் பண்ணையார் (ஜெயபிரகாஷ்). அவரது மனைவி செல்லம்மா. இருவரும் பரந்த மனப்பான்மையும் இரக்கமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்களது வீட்டில் மட்டுமே இருக்கும் தொலைக்காட்சி, டெலிஃபோன் என எல்லா பொருட்களையும் ஊரில் இருக்கும் அனைவரது தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஒருநாள் பண்ணையாரின் நண்பர் சண்முகம் சென்னையில் இருக்கும் தனது மகளின் பிரசவத்திற்கு செல்வதாக கூறி தான் திரும்பி வரும்வரை தனது பத்மினி காரை பண்ணையாரை பயன்படுத்திக் கொள்ளும்படி சொல்கிறார்.
பார்த்த மாத்திரத்திலேயே அந்த காரின் மீது காதல் கொள்கிறார் பண்ணையார். தனக்கு கார் ஓட்டத் தெரியாததால் முருகேசனை ( விஜய் சேதுபதி) அந்த காருக்கு டிரைவராக நியமிக்கிறார்.
ஊரில் இந்த புது காரை வைத்து பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்கின்றன. தனது காரை நினைத்து பெருமைப்படுகிறார் பண்ணையார். குழந்தைகள் காரை துரத்திக் கொண்டு ஓடிவருவது, முருகேசன் ஒரு பெண்ணிடம் காதலில் விழுவது. என ஒவ்வொரு நிகழ்வும் காரை மையமாக வைத்து நடைபெறுகின்றன. இப்படியான நிலையில் தங்களது திருமண நாள் நெருங்கி வருவதால் காரில் செல்லும் தனது ஆசையை வெளிப்படுத்துகிறார் செல்லம்மா. அதற்குள் பண்ணையாரை கார் ஓட்டக் கற்றுக்கொள்ளச் சொல்கிறார். பண்ணையார் கார் ஓட்டக் கற்றுக்கொண்டால் எங்கு தனக்கு வேலை போய்விடுமோ என்கிற பயம் முருகேசனுக்கு . பண்ணையாருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுப்பதை தவிர்த்து வருகிறார். இதற்கிடையில் கார் பண்ணையாரை விட்டு செல்லும் வகையில் சூழல்கள் ஏற்படுகின்றன. பண்ணையார் கார் ஓட்டக் கற்றுக்கொண்டாரா . தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா. முருகேசன் டிரைவராக தனது வேலையை தக்க வைத்துக் கொண்டாரா என்பதே படத்தின் மீதிக் கதை.
ஒரு காரைச் சுற்றிய மனிதர்கள், அவர்களின் உணர்ச்சிகளை நெகிழ்வான தருணங்கள் வழியாக இப்படத்தை இயக்குநர் அருண்குமார் கட்டமைத்திருக்கிறார்.ஆனால் இப்படத்தையும் அதன் கதாப்பாத்திரங்களின் சமூக பின்னணியை இணைத்துப் பார்த்தால். ஒரு சில கேள்விகள் எழாமல் இல்லை. எதார்த்தமாகவும் வெளிப்படையாகவும் இன்னும் சிலவற்றை இப்படம் சித்தரித்திருக்க வேண்டும்.
அது எந்த வகையில் இந்தப் படத்திற்கு ஒரு பின்னடைவாக அமைந்திருக்காது மாறாக கதைக்களத்தை இன்னும் அது செறிவாக்கியிருக்கும். வெளிப்படையாக பண்ணையார் ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். ஒரு நிலவுடமையாளர். அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் முருகேசன் ஒரு தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பண்ணையாரின் அடையாளம் வெளிப்படும் நேரத்தில் அவர்களைச் சுற்றியிருக்கும் கதாப்பாத்திரங்களின் அடையாளங்கள் வெளிப்படையாக இருப்பதில்லை.
ஒரு நிலவுடமையாளர் தனது சமூக அந்தஸ்தை உயர்த்தும் பொருட்களின் மேல் வைத்திருக்கும் காதலை மையமாக வைத்து இப்படம் அமைந்திருக்கிறது. சாதி பேதம் இல்லாமல் பண்ணையாரும் அவரது மனைவியும் எல்லாரையும் சமமாக நடத்துபவர்களாக இருக்கிறார்கள் தான். ஆனால் அது எந்த வகையிலும் விஜயகாந்தின் சின்ன கெளண்டர் படத்திடம் இருந்து வித்தியாசப்படுவதில்லை. பத்மினி காருக்கு பதிலாக நல்ல மரத்தாலான நல்ல நாட்டு மாடுகள் பொறுத்தப் பட்ட ஒரு மாட்டு வண்டியைப் பொறுத்திப்பார்த்தால் இந்த படம் இன்னும் 50 வருடங்களுக்கு முந்தைய காலத்துடன் பொருந்தக் கூடிய படமாக இருக்கும்.
ஒரு கதையில் பார்வையாளர்கள் படத்தின் ஏதோ முக்கிய கதாபாத்திரத்துடன் தங்களை இணைத்து பார்க்க முடியும். பண்ணையார் என்று வைக்கும்போது இருந்த வெளிப்படைத் தன்மை ஏன் எல்லா கதாப்பாத்திரங்களுக்கு பொருந்தவில்லை என்பது தான் கேள்வி. அடையாளம் நீக்கப்பட்டவர்களாக இருக்கும்போது தான் டிரைவர் முருகேசனை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயக்குநர் நினைத்திருந்தால் அது படைப்பாளியின் மிகப்பெரிய பின்னடைவு.