Vetrimaaran | வெற்றியும் சினிமாவும்.. சாமானிய மக்களின் குரலாய் ஒலிக்கும் வெற்றிமாறன்..!
வெற்றிமாறனின் திரைப்படங்கள், ஒரு அழகான பொது சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் வன்முறைகளுக்கான தீர்வைத் தேடவில்லை
பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை, விசாரணை உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வெற்றிமாறன். பெரும்பாலும், இவரது திரைப்படங்கள் விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலித்து வருகிறது.
ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும், காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். ஒட்டு மொத்த தேசமும் இந்த சம்பவத்தை கொண்டாடியது. ஆனால், இந்த இதற்கு முதல் எதிர்ப்புக் குரல் வெற்றிமாறனிடம் இருந்து வந்தது. நிஜ வாழ்கையிலும், திரை வாழ்கையிலும் அதிகாரத்துவத்தின் அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறையை மகிமைப்படுத்துவதை வெற்றிமாறன் கடுமையாக எதிர்த்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்தபோதுதான் தமிழ் சமூகம் 'விசாரணை' திரைப்படத்தின் கருவை உண்மையாக புரிந்து கொண்டது.
வெற்றிமாறன் திரைப்படங்கள்: குறிப்பாக, இவரது இயக்கத்தில் வெளிவந்த 'விசாரணை' திரைப்படம் பல்வேறு சமூக கேள்விகளை முன்னெடுத்தது. பொதுவாக, தமிழ் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் நீதியை நிலைநிறுத்துபவராகவும், குடிமக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுப்பவராகவும் காட்சிப்படுத்தப்படுபவர். பெருங்குற்ற மனம் கொண்ட வில்லன் சமூகப் பிரச்சனையாக கையாளப்பட்டது. வன்முறையின் அடிப்படை இயல்பை விட வன்முறையாளர்களைப் பற்றிய ஆவணமாகவே வில்லன் கதாபாத்திரம் இருந்து வந்தது.
ஆனால், வெற்றிமாறன் திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதும், விளிம்பு நிலை மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட முகமற்ற வன்முறையே முக்கிய பங்கு வகிக்கும். 'விசாரணை' படத்தில் வரும் காவல்துறை அதிகாரிகள், பொல்லாதவன் படத்தில் வரும் டேனியல் பாலாஜி (ரவி) கதாபாத்திரம், 'ஆடுகளம்' திரைப்படத்தில் வரும் 'பேட்டைக்காரன்' கதாபாத்திரம் பொதுவாக நாம் புரிந்து கொண்ட வில்லன்களில் இருந்து மாறுபடுகின்றனர். இவர்களின் வில்லத்தனம் அன்றாட வாழ்க்கையில் இருந்து உருவாக்கப்பட்டது. அன்றாட வாழ்கை உருவாக்கிய அன்றாட வில்லன்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் வெற்றிமாறன் என்றால் அது மிகையாகாது.
வெற்றிமாறனின் திரைப்படங்கள், ஒரு அழகான பொது சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் வன்முறைகளுக்கான தீர்வைத் தேடவில்லை. அகண்டு கிடக்கும் வன்முறைகளுக்கு நடுவே, விளிம்புநிலை மக்களுக்கான சமூகத்தை தேடுகிறது.
வன்முறைக்கான பதில்: 'அசுரன்' திரைப்படத்தில் வரும் சிவசாமி கதாபாத்திரம் துரோகத்தை கடந்து சென்ற எதார்த்த வாழ்கையின் மீது நம்பிக்கை கொள்ளும் விதமாக அமைகிறது. 'கர்ணன்' கதாபாத்திரம் எதிர்காலத்துக்கான ஒரு பதிலாக இருக்குமானால், 'சிவசாமி' கதாபாத்திரம் நிகழ்காலத்தின் மனக்காயங்களை அர்த்தமுடையதாக்க, சிதைக்கப்பட்ட கடந்த காலத்தை ஒன்றாக இணைக்கும் வேதனை மிக்க நினைத்துப் பார்த்தல் ஆகும்.
வரலாற்றுக்குரியவர்களாகக் கருதப்படாத மக்களைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்துவதே வெற்றிமாறனின் வெற்றியாக கருதப்படுகிறது.