”என் நம்பிக்கையை காப்பாற்றியவர்... அவர் இயக்குநரை நம்புறவர் “ - மாறி மாறி புகழ்ந்த தனுஷ், வெற்றிமாறன்!
"வேறு எந்த நடிகராக இருந்தாலும் , இங்க வாங்க சார்னு என்னை தனியா அழைத்து பேசியிருப்பாங்க. ஆனால் தனுஷ்..."
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி :
ஒரு சினிமாவின் வெற்றி என்பது கூட்டு முயற்சி . சந்தேகம் இல்லை ! ஆனால் அதையும் தாண்டி இயக்குநருக்கும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கும் ஒரு புரிதல் வேண்டும் . அது கச்சிதமாக இருக்கும் ஜோடிதான் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. தனுஷை வைத்து இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் உதவி இயகுநராக பணியாற்றியவர் வெற்றிமாறன். அங்கு தொடங்கியது தனுஷ் - வெற்றிமாறன் இருவருக்குமான நட்பு. வெற்றிமாறனிடம் இருக்கும் திறமையும் தனுஷும் , தனுஷிடன் இருக்கும் திறமையை வெற்றிமாறனும் புரிந்துக்கொண்ட காலக்கட்டம் அது! விளைவு வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் படத்தை தனுஷை வைத்து இயக்கினார். படம் சூப்பர் ஹிட் வெற்றி. அதனை தொடர்ந்து ஆடுகளம் படத்தை இயக்கினார் அந்த படத்திலும் தனுஷ்தான் வெற்றியின் ஹீரோ. படம் சூப்பர் ஹிட் . கூடுதலாக தனுஷிற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு வடசென்னை , அசுரன் என இந்த கூட்டணியில் வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்று தனுஷ் இந்திய சினிமா போற்றும் முக்கிய நடிகராக இருக்கிறார் என்றால் அதில் செல்வராகவனுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவிற்கு வெற்றிமாறனுக்கும் இருக்கிறது என்றால் மிகையில்லை.
தனுஷ் இப்படி! வெற்றிமாறன் அப்படி!
வெற்றிமாறன் தனுஷை பற்றி பல மேடைகளில் மனம் திறந்திருக்கிறார். அப்படித்தான் ஒரு முறை வடசென்னை படப்பிடிப்பு தளத்தில் நடந்த நிகழ்வை பகிர்ந்தார். “ வடசென்னை படத்தில் ஜெயில் சீனை 36 நாட்கள் ஷூட் செய்தோம். அவருக்கு 4 நாட்கள்தான் டயலாக் . மற்ற நாட்கள் எல்லாம் சும்மா நடந்துட்டு போகனும் வரனும். வேறு எந்த நடிகராக இருந்தாலும் , இங்க வாங்க சார்னு என்னை தனியா அழைத்து பேசியிருப்பாங்க. ஆனால் தனுஷ் இவ்வளவையும் நிதானமா பொறுமையா பண்ணுவாரு, அவருக்கு இயக்குநரின் மேலும் அவரின் விஷன் மேலும் இருக்கும் நம்பிக்கையை ஒரு நடிகரா அவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்தது கிடையாது. இயக்குநருக்கு தெரியும் நான் என்ன பண்ணனும்னு , அதை நான் மதிப்பேன், அதை நான் செய்குறதுக்குதான் நான் இதில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதை செய்வேன்னு இருப்பாரு.” என்றார். அதே போல தனுஷ் ஒரு நேர்காணலில் “ நான் நம்பிக்கை வைத்த நான்கு பேரில் இயக்குநர் வெற்றி மாறனும் ஒருவர். மற்ற மூவர் பெண்கள் . அவங்கள விடுங்க ..ஆனால் வெற்றிமாறன்தான் என் நம்பிக்கையை காப்பாற்றியவர்” என்றார்