Varalakshmi Sarathkumar: 'அப்பா நடிக்க விடல..' ப்ளாக்பஸ்டர் படங்களை சரத்குமாரால் மிஸ் செய்த வரலட்சுமி..!
பல ஹிட் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை எல்லாம் அப்பா நிராகரித்த காரணத்திற்காகவே வேண்டாம் என ஒதுக்கினேன் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மகள் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார். ஒரு செலிபிரிட்டியின் மகள் என்பதால் எல்லாம் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்து விடவில்லை. தனது திறமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவை தான் இன்று வரலக்ஷ்மி ஒரு பிரபலமான நடிகையாக இருப்பதற்கு முக்கியமான காரணம்.
அசத்தும் வரலட்சுமி:
ஹீரோயினாக நடித்த படங்களை விடவும் வரலக்ஷ்மி ஏராளமான படங்களில் வில்லியாக நடித்து தூள் கிளப்பி வருகிறார். கம்பீரமான நடிப்பு, உடல் மொழி, வில்லத்தனமான பார்வையால் தென்னிந்திய சினிமாவில் ஒரு அக்மார்க் வில்லியாக சிறப்பாக பயணித்து வருகிறார் வரலட்சுமி.
சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராத காதல் கொண்டவர் வரலட்சுமி சரத்குமார். அதன் காரணமாகவே பாலிவுட் நடிகர் அனுபம் கெரின் நடிப்பு பள்ளியில் பயின்று தனது நடிப்பு திறமையை மேலும் மெருகேற்றி கொண்டார். அவர் படித்து கொண்டு இருக்கும் போதே பல பிரபலமான முன்னணி இயக்குநர்களின் சூப்பர் ஹிட் படங்களில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அந்த வாய்ப்புகளை எல்லாம் நழுவிட்ட காரணம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பேசியிருந்தார் வரலட்சுமி சரத்குமார்.
அனுமதிக்காத சரத்குமார்:
வரலட்சுமி பேசுகையில் "பாய்ஸ் படத்தில் நடிப்பதற்காக ஷங்கர் சார் எத்தனையோ முறை அழைத்து பார்த்தார். ஆனால் அப்பா அப்போது நடிக்க அனுமதிக்கவில்லை. என்னை தான் ஷங்கர் தான் முதலில் தேர்வு செய்தார். ஆடிஷன் ஸ்க்ரீனிங் டெஸ்ட் அனைத்தும் செய்து ஒகே சொல்லி விட்டார். மிகவும் ஆசையாகவும் இருந்தது ஆனால் அப்பா சம்மதிக்காததால் அந்த வாய்ப்பை நிராகரித்தேன்.
அதற்கு பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்த 'காதல்' படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்தது. அதையும் அப்பா இப்போது வேண்டாம் படிப்பு முடியட்டும் அதற்கு பிறகு நடிக்க வரலாம் என சொல்லிய காரணத்தால் அந்த வாய்ப்பையும் நான் இழந்தேன்.
மிஸ் செய்தது வருத்தம்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'சரோஜா' படத்திற்காகவும் அழைப்பு வந்தது. அதையும் அப்பாவுக்காகவே வேண்டாம் என ஒதுக்கினேன். பார்க்கும் போதெல்லாம் சரோஜா படத்துக்கு கூப்பிட்டேன் என அடிக்கடி வெங்கட் பிரபு கூறுவது உண்டு. அப்போ விடுடா இப்போ பாருடா என நானும் அவரிடம் விளையாடுவதுண்டு. இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்த வருத்தம் இருந்தது'' என்றார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலமே ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். தனது துறுதுறுப்பான பேச்சாலும் நடிப்பாலும் முதல் படத்திலேயே கவர்ந்த வரலட்சுமி சரத்குமார் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகையானார். கம்பீரமான வில்லியாக 'சர்க்கார்' படம் அடையாளம் காட்டியது. அதனை தொடர்ந்து பல படங்களில் மிரட்டலான வில்லியாக திறம்பட நடித்து வருகிறார். தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2 , மாரி 2, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் அவரின் அபாரமான நடிப்பு பாராட்டுகளை குவித்தது.